விழுப்புரம் அடுத்த மரகதபுரத்தில் அனுமதியின்றி ரெகார்ட் டான்ஸ்! - புகைப்படம் எடுத்த செய்தியாளர் மீது தாக்குதல்!
விழுப்புரம்:
விழுப்புரம் அடுத்த மரகதபுரத்தில் அனுமதியின்றி திறந்தவெளியில் இளம்பெண்களை வைத்து ரெகார்ட் டான்ஸ் நடத்தப்பட்டது. இதை புகைப்படம் எடுக்க முயன்ற செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய வன்முறை கும்பல் மீது விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் தாலுகா மரகதபுரத்தில் சில போக்கிலிகள் கடந்த 11ம் தேதி இரவு திறந்தவெளியில் இளம்பெண்களை அழைத்து வந்து அரைகுறை ஆடைகளுடன் ரெக்கார்டு டான்ஸ் நடத்திக் கொண்டிருந்தனர். இதைப் பார்க்க சிறுவர்கள், இளைஞர்கள், ஊர் பெரியவர்கள் திரண்டனர். இந்த அருவெறுக்கத்தக்க டான்ஸ் நடைபெறுவதை செய்தியாளர் சின்னத்தம்பி தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். இதைப்பார்த்ததும் ஆத்திரமடைந்த போக்கிலிகள் ஆன சூப்பர் என்கிற மாரிமுத்து, ரவீந்திரன் என்கிற கி.எஸ், ஐயப்பன், மண்ணாங்கட்டி மற்றும் தெரிந்த பெயர் தெரியாத 3 நபர்கள் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியும், செய்தி சேகரிக்கிறாயா, நீ இங்கிருந்து சென்றால்தானே செய்தி வெளியிடுவாய் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அத்துடன் செய்தியாளர் சென்ற இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து சின்னதம்பி கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸார் அனுமதியின்றி ரெகார்ட் டான்ஸ் நடத்தியது, செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தது, வாகனத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்து உள்ளிட்டோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ரெகார்ட் டான்ஸ் ஆடிய இளம்பெண்கள் மற்றும் அவர்களை அழைத்து வந்த இடைத்தரகர் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments