சாதி இரண்டொழிய வேறில்லை - பாரதி இன்றும் தேவைப்படுகிறார்! ... முதல்வர் மு.க.ஸ்டாலின் முற்போக்கு பேச்சு
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் இன்று நடைபெற்ற மகாகவி பாரதியார் நினைவு நாள் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நூற்றாண்டு பாரதி சுடரை ஏற்றி வைத்து, வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி அவர்களிடம் வழங்கினார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா இன்று (12-9-2021) துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மகாகவி பாரதியார் நினைவு நாள் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்ச்சியில், நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட நூற்றாண்டு பாரதி சுடரை ஏற்றி வைத்து, வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி அவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
முன்னதாக திருவல்லிக்கேணி நினைவு இல்லத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பாரதியார் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். இந்நிகழ்வில் பாரதியார் – செல்லம்மாள் போன்று சிறுவர்கள் வேடமணிந்து மேடையில் காட்சியளித்தனர்.
பாரதியார் நூற்றாண்டு துவக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது,
அன்புள்ள ஒன்றிய அரசின் மாண்புமிகு இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் அவர்களே!
நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.பொன்முடி அவர்களே, திரு.சேகர்பாபு அவர்களே!
வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் அன்பிற்கினிய திரு. வானவில் கே. ரவி அவர்களே!
டாக்டர் எம்.ஜி.ஆர் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களே!
வானவில் பண்பாட்டு மையத்தின் நிர்வாகிகள் வ.வே.சு. அவர்களே!
கலைமாமணி ஷோபனா ரமேஷ் அவர்களே!
மூத்த வழக்கறிஞர் திரு. காந்தி அவர்களே!
என்னுடைய மதிப்பிற்குரிய சொல்லின் செல்வர் திரு.சுகி சிவம் அவர்களே!
பிரபல இசைப் பாடகர்கள் திருமதி அருணா சாய்ராம் அவர்களே!
திருமதி அனுராதா ஸ்ரீராம் அவர்களே!
இசையமைப்பாளர் திரு.அருண் பிரகாஷ் அவர்களே!
மற்றும் வானவில் பண்பாட்டு மையத்தினுடைய நிர்வாகிகளே! நண்பர்களே!
இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கும் ஆன்றோர்களே! சான்றோர்களே!
அன்பிற்குரிய மாணவச் செல்வங்களே!
உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
தமிழகம் தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான் - என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதினார். அத்தகைய பெரும்புலவன் பாரதியின் பெருமையைப் போற்றக்கூடிய விழாவாக வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பில் எழுச்சியோடு, ஏற்றத்தோடு, உணர்ச்சியோடு கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
உங்கள் அமைப்பின் பெயர் வானவில் பண்பாட்டு மையம் என்பதாகும்.
வானவில்லின் வண்ணங்கள் ஏழுதான்!
ஆனால், மகாகவி பாரதியினுடைய வண்ணங்களும் எண்ணங்களும் ஏழு என்ற எண்ணிக்கைக்குள் அடக்க முடியாதவை! பல ஆயிரம் சிந்தனைகள் கொண்டவர் பாரதி அவர்கள்.
அந்தச் சிந்தனைகள் யாருக்கும் கட்டுப்படாத சிந்தனைகள், சுதந்திர சிந்தனைகள் ஆகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலே அடக்க முடியாத சிந்தனைகள் கொண்டவராகப் பாரதி இருந்ததால்தான் இன்று நாம் அவரைப் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
குடும்பமாக இருந்தாலும் -
சாதியாக இருந்தாலும்-
மதமாக இருந்தாலும் -
அரசாக இருந்தாலும் -
எந்த அடக்குமுறையையும் கேள்வி கேட்டவர் பாரதியார் அவர்கள்.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் நாள் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து விட்டு முதலமைச்சர் என்ற முறையில் நான் உரையாற்றும் போது, மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன, அவர் மறைந்த ஆண்டின் நூற்றாண்டு என்று இந்த ஆண்டைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன்.
பாரதி மறைந்தாலும் அவரது கவிதை வரிகள் மறையாது. மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். பாரதியின் அச்சிட்ட புத்தகங்கள் மறைந்தாலும் மக்கள் மனதில் உள்ள பாரதியின் பாடல்களைக் கொண்டு அவற்றை மீண்டும் அச்சிடலாம். அத்தகைய வலிமை பாரதியின் படைப்புகளுக்கு உண்டு.
* அச்சம் தவிர்
* உடலினை உறுதிசெய்
* ஏறுபோல் நட
* கொடுமையை எதிர்த்து நில்
* சூரரைப் போற்று
* சோதிடந்தனை இகழ்
* தெய்வம் நீ என்று உணர்
* பிணத்தினைப் போற்றேல்
* புதியன விரும்பு
* போர்த்தொழில் பழகு - என்ற அவரது புதிய ஆத்திச்சூடி வரிகள் எல்லாம் எத்தனை நூற்றாண்டுகள் கழித்தும் எழுச்சியையும் உணர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடியவை. அதனால்தான் அவரை 'மக்கள் கவிஞர்' என்று 1947ஆம் ஆண்டே மகுடம் சூட்டி எழுதினார் பேரறிஞப் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள்.
''பாரதியின் பாதை - புதிய பாதை!
சமதர்மப் புரிக்குப் போவதற்கு அமைத்தப் பாதை!
பரங்கியரை ஓட்டி விடுவது மட்டுமல்ல -
நாட்டுக்கு கேடு தரும் அனைத்தையும் ஓட்டி -
புதிய சமூக அமைப்பாக்கும் பாதைதான் பாரதியினுடைய பாதையாகும்.
அந்தப் புதிய பாதையை நாம் போற்றுவோம்" என்று 1947-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதினார்கள், அதையே வானொலியிலும் பேசினார்கள்.
அதனால்தான் கழக அரசு அமைந்தவுடன், தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சரான போது எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லம் ஆக்கிப் பெருமை சேர்த்தார் தலைவர் கலைஞர் அவர்கள். அன்றைக்கு அமைச்சராக இருந்த மரியாதைக்குரிய சி.பா. ஆதித்தனார் அவர்கள் தலைமையில் 12.5.1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இதன் தொடர்ச்சியாகப் பாரதியார் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை நேற்றைக்கு முன்தினம் தமிழ்நாடு அரசு சார்பில் நான் அறிவித்திருக்கிறேன்.
* மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாளை அரசின் சார்பாக, மகாகவி நாளாக அறிவித்துள்ளோம்.
* பாரதி பெயரால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது வழங்க இருக்கிறோம். மாணவர் ஒருவருக்கும் மாணவி ஒருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது.
* பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளைத் தொகுத்து 'மனதில் உறுதி வேண்டும்' என்ற புத்தகமாக அரசு வெளியிட இருக்கிறது. 37 லட்சம் பள்ளி மாணவ, மாணவியர்க்கு இந்தப் புத்தகம் வழங்கப்பட இருக்கிறது.
* பாரதி ஆய்வாளர்களான பெ .தூரன், ரா. அ. பத்மநாபன், தொ.மு.சி. ரகுநாதன், இளசை மணியன் ஆகியோர் நினைவாக அவர்களது குடும்பத்தாருக்கு நிதி வழங்கப்பட இருக்கிறது.
* பாரதி படைப்புகளை மீட்டெடுத்த பெரியவர் சீனி. விசுவநாதன், பேராசிரியர் ய. மணிகண்டன் ஆகியோருக்கும் நிதி வழங்கப்பட இருக்கிறது.
* பாரதியின் உருவச் சிலைகள் பூம்புகார் கலைக்கூடத்தில் தயாரிக்கப்பட இருக்கின்றன.
* 1973ஆம் ஆண்டு பாரதியாரின் இல்லத்தைத் திறந்து வைத்துப் பேசிய முதலமைச்சர் கலைஞர் அவர்கள், பாரதியினுடைய கையெழுத்தை வியந்து பாராட்டி இருக்கிறார். 'அழகாகப் பொடிப்பொடியாக அச்சுக்கோர்த்ததுபோல பாரதியார் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்' என்று சொன்னார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.
அந்தக் கையெழுத்துப் பிரதிகள் மொத்தமாகத் தொகுக்கப்பட்டு அவை அதன் வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும்.
* புகழ்பெற்ற ஓவியங்களுடன் பாரதியின் கவிதைகள் சித்திரக்கதை நூலாகவும் வெளியிடப்படும்.
* பாரதி குறித்த முக்கிய ஆய்வுநூல்கள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.
* பாரதியின் நூல்கள் தொகுக்கப்பட்டு எட்டயபுரத்திலும் திருவல்லிக்கேணி இல்லத்திலும் வைக்கப்படும். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் பாரதியியல் என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.
* உலகத் தமிழ்ச் சங்கங்களை இணைத்து பாரெங்கும் பாரதி என்ற நிகழ்ச்சி நடத்தப்படும்.
* “திரையில் பாரதி” என்ற பெயரில், திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதி பாடல்கள் கொண்ட இசை நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும்.
* சென்னை, பாரதி நினைவு இல்லத்தில் ஓராண்டுக்கு வாரந்தோறும் நிகழ்ச்சி நடத்தப்படும்.
* திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும்.
* காசியில் பாரதி வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க நிதி உதவி வழங்கப்படும்.
* பாரதி படைப்புகளைக் குறும்படமாக எடுக்க நிதிஉதவி வழங்கப்படும்.
* பாரதியின் பாடல்கள் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்களில் எழுதியும் வரைந்தும் வைக்கப்படும்.
* மகளிர் சுயஉதவிக்குழுக்களின் வாழ்வாதாரப் பூங்காவுக்குப் பாரதியார் பெயர் சூட்டப்படும்.
- இப்படி ஏராளமான அறிவிப்புகளைத் தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது.
'இது எனது அரசல்ல, நமது அரசு ' என்று நான் சொல்லி இருக்கிறேன். இந்த அரசு ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், ஒரு கொள்கையின் அரசாக, ஓர் இனத்தின் அரசாக இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறோம். அந்த அடிப்படையில் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் உணர்ச்சிமிகு கவிதைகளைத் தந்த மகாகவி பாரதியைத் தமிழ்நாடு போற்றுகிறது.
இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகிகளைப் போற்றுவதற்கும்-
மொழிப் போராட்டத்துக்காகப் பாடுபட்ட தியாகிகளை மதிப்பதற்கும்-
எல்லைப் போராட்ட வீரர்களைப் போற்றுவதற்கும் -
திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும் மறந்தது இல்லை. நான் அதை பட்டியலிட ஆரம்பித்தால் அது மிக நீளமாகப் போய்விடும்.
கப்பலோட்டியக் தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் அறிவிப்புகளைக் கடந்த வாரத்தில் நான் செய்தேன்.
பாரதியின் நண்பர் பரலி சு.நெல்லையப்பருக்கு நிதி உதவி வழங்கி வந்த அரசுதான் திமுக அரசு. அந்த வரிசையில் தான் பாரதி நினைவு நூற்றாண்டு விழாவையும் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது.
பாரதியைப் போற்றுவதற்குக் காரணம், அவரது சிந்தனைகள் காலங்களைக் கடந்தும் தேவைப்படுபவை என்பதால்தான்.
* சாதி இரண்டொழிய வேறில்லை என்றே
தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம் - என்று இன்றைக்குப் பாரதி அதற்காகத் தேவைப்படுகிறார்!
* சாதி நூறு சொல்லுவாய் போ போ போ - என்று விரட்டிய பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!
* ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே - என்று கண்டிக்கப் பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!
* சாதி, மதங்களைப் பாரோம் - என்று கம்பீரமாக அறிவிக்கப் பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!
* முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடமை - என்று பிரகடனம் செய்வதற்குப் பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!
* யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் - என்று தமிழ் வெறியோடு பாடக்கூடிய பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!
* இயேசு கிறிஸ்துவைப் புகழ்ந்து எழுதிவிட்டு ஒம் சக்தி என்று முடிக்கும் சகோதரத்துவப் பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!
* சங்கராபரணம் இராகத்தில் அல்லாவுக்கும் பாட்டு எழுதிய பரந்தமனப்பான்மை பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!
* காக்கை குருவி எங்கள் சாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் - என்று சுற்றுச்சூழல் பேசிய பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!
- இத்தகைய பாரதிகள் இன்றும் தேவை!
காலத்தின் தேவை!
அன்பு வேண்டும் -
அறிவு வேண்டும் -
கல்வி வேண்டும் -
நீதி வேண்டும் -
இந்த நான்கையும்தான் பாரதி விரும்பினார். அவரது எல்லாப் பாட்டுக்கும் அடிப்படை இதுதான். இந்த நான்கும் கொண்டவர்கள் மேலோர், மற்றவர்கள் கீழோர் என்பது பாரதியின் கருத்து. இத்தகைய மேலோரை உருவாக்க வானவில் பண்பாட்டு மையம் போன்ற அமைப்புகள் இன்னும் சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அந்த முயற்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கக்கூடிய அரசு என்றைக்கும் துணை நிற்கும், துணை நிற்கும் என்ற உறுதியைச் சொல்லி,
வாழ்க பாரதி! பாரதி! என்று கூறி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.
இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றை நிகழ்வில் உரையாற்றினார்.
சென்னை, பாரதியார் நினைவில்லத்தில் நடைபெற்ற பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வில் பங்கேற்று, காலங்கள் கடந்து நிற்கும் மக்கள் கவிஞராம் பாரதியின் சிந்தனைகள் ஏன் இன்றைக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் மானுட சமூகத்துக்கும் தேவை என உரையாற்றினேன். pic.twitter.com/VdImj0D6Bm
— M.K.Stalin (@mkstalin) September 12, 2021


No comments
Thank you for your comments