வேலூரில் டைடல் பார்க், இராணிப்பேட்டையில் தோல் பொருட்கள் உற்பத்திப் பூங்கா ... பட்ஜெட்டில் அசத்தலான பல அறிவிப்புக்கள்
சென்னை:
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் தொழில் வளர்ச்சிக்காக பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
வேலூர், விழுப்புரம் , திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்திப் பூங்கா
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா
திருவள்ளூர் மாவட்டத்தின் மாநால்லூரில் மின்-வாகனப் பூங்கா.
பட்ஜெட்டில் வெளியான தொழில்கள் தொடர்பான அறிவிப்புகள்:
ஒற்றைச் சாளர அமைப்புமுறை திறம்பட செயல்படுத்தப்பட்டு, அதன் கீழ் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேலும் 100 சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேலும் 110 சேவைகளும் ஒற்றைச் சாளர வலைவாசலின் கீழ் கொண்டு வரப்படும்.
வளர்ந்து வரும் துறைகளில் தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்காக உயிரியல் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றிற்கான புதிய தொழில் கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும். அதிக அளவிலான முதலீடுகளை ஊக்குவிக்க புலம்பெயர் தமிழர்களுடனான உறவு வலுப்படுத்தப்படும். முதலீட்டாளர்களின் முதலீடு சார்ந்த முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும், சிறப்பாக திட்டமிடுவதற்கும், மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளைப் பற்றி விவரமான, துல்லியமான தரவுதளம் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டின் உள்ள தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45,000 ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் விதமாகவும், 3.5 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறும் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் 1,000 கோடி ரூபாய் செலவில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா ஒன்று அமைக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தின் மாநல்லூரில் ஒரு மின்-வாகனப் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்திப் பூங்கா, மணப்பாறை, தேனி மற்றும் திண்டிவனம், ஆகிய இடங்களில் மூன்று உணவுப் பூங்காக்களும் நிறுவப்படும். தொழில்துறை அலகுகளுக்காக தூத்துக்குடியில் 60 MLD அளவு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஓசூரில் உள்ள தொழிலகங்களுக்கான 10 MLD TTRO கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்படும்.
நிதிநுட்பத் துறை வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் மாபெரும் வாய்ப்புகள் உள்ளன. அதனை முன்னெடுக்கும் வகையில் “நிதிநுட்ப கொள்கை” ஒன்று வெளியிடப்படும். மேலும், வழிகாட்டி நிறுவனத்தில் இதற்கென பிரத்யேகமான “நிதிநுட்ப பிரிவு” ஒன்று அமைக்கப்பட்டு, நிதிநுட்ப நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும். சென்னையில் இரண்டு கட்டங்களாக நந்தம்பாக்கம் மற்றும் காவனூரில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும். முதற்கட்டமாக நந்தம்பாக்கத்தில் இந்த நிதிநுட்ப நகரம் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
பழைய மாமல்லபுரம் சாலை தகவல் தொழில்நுட்ப துறை பெருவழியாக வளர்ச்சியடையவதற்கு, 2000 ஆம் ஆண்டில் சென்னையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது முக்கிய காரணமாகும். இப்போது தமிழ்நாட்டிலுள்ள நிலை II மற்றும் நிலை III நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. முதல் கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்.
ஓசூர், சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூரை இணைக்கும் பாதுகாப்பு தொழில்துறை பெருவழிகளை நிறுவுவதாக ஒன்றிய அரசு அறிவித்த போதிலும், அதற்கான ஒன்றிய அரசின் உதவி குறைவாகவே உள்ளது. கோயம்புத்தூரில், 500 ஏக்கர் பரப்பளவில், 225 கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை மாநில அரசு அமைத்து செயல்படுத்தும். இதன் மூலம், 3500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள திருவண்ணாமலை, தர்மபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். இப்பூங்காக்களில், தயார்நிலையில் உள்ள தொழிற்கூடங்கள் (Play & Play facilities) உட்பட உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். இதற்கென இப்பூங்காக்களில், முதற்கட்டமாக, 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4,000 ஏக்கர் நிலங்கள் மேம்படுத்தப்படும்.
No comments
Thank you for your comments