Breaking News

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் எத்தனை பேர்? அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய மணிஷ் சிசோடியா

புதுடெல்லி :

கொரோனா 2-வது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறந்த நிலையில், எத்தனை பேர் என்ற புள்ளி விவரங்களை சேகரிக்க டெல்லி அரசு குழு அமைத்துள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையில் இந்தியா மிகவும் மோசமாக பாதித்தது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமாக தேவைப்பட்டது. தினசரி நோயாளிகள் அதிகரிக்க, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைய கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப்பெரிய அளவில் இருந்தது. 

ஒவ்வொரு மருத்துவமனைகளும் டெல்லி நீதிமன்றங்களை நாடின. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட ஆக்சிஜன் டெல்லி கொண்டு செல்லப்பட்டன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்தியா முழுவதும் ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆனால், மத்திய அரசு ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக எந்த பட்டியலையும் மாநில அரசுகள் வழங்கவில்லை என தெரிவித்தது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில்தான் ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி மாநிலத்தில் உயிரிழந்த கொரோனா நோயாளிகள் எத்தனை பேர்? என்பதை கண்டறிய உயர்மட்ட குழுவை டெல்லி மாநில அரசு அமைக்க திட்டமிட்டது. அதற்கான திட்டத்தை தயார் செய்து, ஒப்புதலுக்காக துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் உயர்மட்ட குழுவை அமைக்க ஒப்புதல் வழங்கவில்லை.

இந்த நிலையில் உயர்மட்ட குழுவை அமைப்பதற்கான கோப்பில் ஆளுநர் கையெழுத்து போடாமல் உள்ளார். குழு அமைப்பதற்கான நடைமுறையை நிறுத்தி வைக்கக்கூடாது என ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளார்.

No comments

Thank you for your comments