ஐடி இணையதளத்தில் தொடரும் கோளாறுகள்.. இன்று விளக்கம் அளிக்க இன்போசிசுக்கு மத்திய நிதியமைச்சகம் சம்மன்
புதுடெல்லி, ஆக.23-
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது உள்ளிட்டவற்றை எளிமையாக்கும் வகையில் புதிய இ-பைலிங் போர்டல் உருவாக்கப்பட்டது. இதன் செயல்பாட்டில் தொடர்ந்து குளறுபடிகள் இருந்து வருவதை அடுத்து, அது குறித்து இன்று விளக்கம் அளிக்க இணையதளத்தை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனத்துக்கு மத்திய நிதியமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.
இது குறித்து வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் இணையதளம் தொடங்கப்பட்டு 2.5 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் இ-பைலிங் போர்டலில் தொடர்ந்து கோளாறுகள் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து இன்று மத்திய நிதியமைச்சரிடம் விளக்கம் அளிக்க இன்போசிஸ் நிறுவன எம்டி மற்றும் சிஇஓ-வான ஷ சலில் பரேக்-க்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது என்று டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இ-பைலிங் போர்டலை இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கி, பராமரித்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த ஜூன் மாதம் வரை இன்போசிஸ் நிறுவனத்துக்கு அரசு ரூ. 164.5 கோடி அளித்துள்ளது. இந்த போர்டல் இயங்க தொடங்கியது முதலே பல்வேறு பிரச்சினைகளை பயன்பாட்டாளர்கள் சந்தித்து வந்தனர். இது குறித்து ஸ்கீரீன் சாட்டுகளை எடுத்து டுவிட் செய்வதும், அதில் நிதியமைச்சரை சேர்த்து விடுவதும் தொடர்ந்தது. இருப்பினும் இந்த பிரச்சினைகளுக்கு இன்போசிஸ் தீர்வு காணவில்லை. நேற்று முன்தினம் முதல் போர்டலே பயன்பாட்டில் இல்லாமல் போனது. இதையடுத்து இன்போசிசுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

No comments
Thank you for your comments