Breaking News

செய்ய முடியாத தேர்தல் வாக்குறுதிகளால் ஏமாற்றிவிட்டது திமுக.... இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை:

நடைமுறைப்படுத்த முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களை ஏமாற்றிவிட்டது என்று முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி  குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு,  சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) இன்று  தாக்கல் செய்யப்பட்டது.



காகிதமில்லாமல் தயாரிக்கப்பட்ட படஜெட்டை கணினியில் பார்த்து வாசிக்க தொடங்கினார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். எதிர்க்கட்சியினரின் கூச்சல், அமளிக்கு மத்தியில் பட்ஜெட் உரையை தொடர்ந்து வாசித்தார்..

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

வெளியே வந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

சட்டசபை தேர்தலின் போது 500 க்கும் மேற்பட்ட அமல் செய்ய முடியாத வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் போடப்போகும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பது தான் எனக் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகும் நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் மாணவர்களிடையே குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

நடைமுறைப்படுத்த முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களை ஏமாற்றிவிட்டது .

வெள்ளை அறிக்கையின் போது உண்மைக்கு புறம்பான தகவலை நிதியமைச்சர் வெளியிட்டு இருக்கிறார். வாக்குறுதி அளித்துவிட்டு நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

அதிமுகவினர் பொய் வழக்குகளை போடுவதை வன்மையாக கண்டிக்கிறோம், பொய் வழக்குகளை கண்டு அதிமுக அஞ்சாது.

”நமது அம்மா” பத்திரிகை அலுவலகத்தில் சோதனை என்ற பெயரில் ஒரு நாள் பத்திரிகையை வெளியிட முடியாமல் தடுத்துவிட்டனர். அதற்காகவும், பத்திரிகை சுதந்திரத்தை காலில் போட்டு நசுக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

இவ்வாறு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

No comments

Thank you for your comments