Breaking News

கான்ட்ராக்டர் வெற்றிவேல் வீட்டில் ரெய்டு... சிக்கலில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி

சென்னை:

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது ஒப்பந்தங்கள் பெற்ற சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரரும் அதிமுக பிரமுகருமான மற்றொரு முன்னாள் அதிமுக அமைச்சர் பா. வளர்மதியின் உதவியாளருமான வெற்றிவேல், அவரது தந்தை துலுக்கானம் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ12 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் முன்னாள் அதிமுக அமைச்சர் பா. வளர்மதி சிக்கலில் உள்ளார்.


கோவை மாவட்ட அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலத்து பிரமுகர்கள், மாஜி அமைச்சர்கள், எம்.பி.க்கள் என அனைவரையும் ஓரம்கட்டிவிட்டு கிடுகிடுவென வளர்ச்சி கண்டவர் மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. சசிகலா குடும்பத்தில் ஏற்றமும் இறக்கமும் பெற்றவர் எஸ்.பி.வேலுமணி.  கடந்த 10 ஆண்டுகாலமாக உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்த 10 ஆண்டுகளில் உள்ளாட்சி துறை தொடர்பான பல்லாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் அனைத்தையும் தமது பினாமி நிறுவனங்கள் பெயரிலேயே எடுத்து ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டார் எஸ்.பி.வேலுமணி என்பதே வழக்கு.

இது தொடர்பாக, திமுகவின் ஆர்.எஸ். பாரதி, அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இதனடிப்படையில் அண்மையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், பினாமிகளுக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கோவை, சென்னை, திண்டுக்கல் என பல இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.  இந்த சோதனையில் ரொக்கம் ரூ.18 லட்சமும் பல முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. அத்துடன் எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்குகள், வங்கி லாக்கர்களும் முடக்கப்பட்டன. இந்த வங்கி லாக்கர்களில் இருந்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இத்தனை ஆவணங்களையும் ஆராய்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அடுத்த கட்ட ஆபரேஷனை நடத்தி வருகின்றனர். 

அதில் ஒன்று எஸ்.பி.வேலுமணியின் ஆடிட்டர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோரது கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. இதனையடுத்து எஸ்.பி. வேலுமணி பதவி காலத்தில் ஒப்பந்தம் பெற்றவர்கள்தான் இப்போதைய ரெய்டில் சிக்கியிருக்கிறார்கள். சென்னையில் நேற்று   மாலை முதல் மாநகராட்சி ஒப்பந்ததாரரும் அதிமுக பிரமுகருமான வெற்றிவேல் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனை விடிய விடிய நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ11.8 லட்சம் ரொக்கம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் வெற்றிவேலின் தந்தை துலுக்கானம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் பிடியில் சிக்கியிருக்கும் வெற்றிவேல், அதிமுகவின் மற்றொரு முன்னாள் அமைச்சரான பா. வளர்மதியின் உதவியாளராகவும் இருக்கிறாராம். அதிமுகவில் சென்னை விருகம்பாக்கம் பகுதி துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார் வெற்றிவேல். 

 தற்போது வெற்றிவேல் சிக்கியிருப்பதன் மூலம் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கும் நெருக்கடி ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே இளம் வயது முதல் அதிமுகவில் பேச்சாளராக இருந்தவர் பா. வளர்மதி. 1984&ல் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவின் அதி தீவிர விசுவாசியானார். தற்போதிருக்கும் அதிமுக பெண் தலைவர்களில் முதன்மையானவர் பா. வளர்மதி. 1991&96 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சென்னையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், ஆபாச போராட்டங்கள் என அனைத்திலும் வளர்மதியின் பெயர் அடிபட்டு கொண்டே இருக்கும். 2001&ல் ஆலந்தூரில் ஆர்.எம். வீரப்பனை தோற்கடித்து ஜெயலலிதாவின் குட்புக்கில் உச்சத்துக்குப் போனார்.  அப்போது ஜெயலலிதாவால் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச் சராக்கப்பட்டார்.

2011 சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்று சமூக நலத்துறை அமைச்சரானார். ஆனால் 2016 சட்டசபை தேர்தலில் திமுகவின் கு.க.செல்வத்திடம் ஆயிரம் விளக்கு தொகுதியில் தோற்றார் வளர்மதி. அதிமுகவில் இலக்கிய அணி செயலாளராக இருந்தார். பின்னர் தமிழக பாடநூல் கழகத் தலைவராக 2017&ல் பா. வளர்மதி நியமிக்கப்பட்டார். அவரது இந்த நியமனம் பெரும் சர்ச்சையானது. அண்மையில் அதிமுக மகளிரணி மாநில செயலாளராகவும் பா. வளர்மதி நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது எஸ்.பி.வேலுமணி வழக்கில் பா. வளர்மதியின் உதவியாளர் வெற்றிவேல் சிக்கியிருப்பது அதிமுக வட்ட்டாரங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ரெய்டு காரணமாக எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கில் திருப்பங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கிற்குள் மாஜி அமைச்சர் வளர்மதியும் கொண்டு வரப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. மாநகராட்சி ஒப்பந்தம் என்ற ஒற்றை நூலை பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அதில் இருக்கும் மாஜி அமைச்சர்களை எல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை குறி வைத்து வருகிறது. மாநகராட்சி ஒப்பந்தங்கள் என்ற ஒற்றை புள்ளி மூலமாக பலரை விசாரிக்கும் முடிவில் லஞ்ச ஒழிப்புத்துறை இறங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நாளுக்கு நாள் தீவிரமான ரெய்டுகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரில் தொடங்கிய ரெய்டு தற்போது முன்னாள் அமைச்சர் வளர்மதியின் உதவியாளர் வரை வந்து நிற்கிறது. அதிலும் நடந்து முடிந்த ரெய்டுகளுக்கும் இனி நடக்க போகும் ரெய்டுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன... 

No comments

Thank you for your comments