புதிய வாகன கொள்கையால் காயலாங்கடைக்கு செல்ல காத்திருக்கின்றன 51 லட்சம் வாகனங்கள்
சென்னை:
பழைய வாகனங்களால் காற்று மாசு ஏற்படுவதை தடுப்பதற்கு மத்திய அரசு புதிய வாகன கொள்கையை கொண்டு வந்தது.
இதன்படி நாடு முழுவதும் 51 லட்சம் தனியார் வாகனங்களும், 17 லட்சம் வணிக வாகனங்களும் சாலைகளில் ஓடுவதற்கு தகுதியற்றவை என அறிவிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 16 லட்சம் பழைய வாகனங்கள் காயலாங்கடைக்கு செல்ல காத்திருக்கின்றன
கடந்த சில ஆண்டுகளாகவே வாகன துறையானது தொடர்ந்து பெரும் சரிவினைக் கண்டு வந்தது. இது கடுமையான பொருளாதார மந்தம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி மற்றும் கொரோனா என பலவற்றாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
இப்படியொரு மோசமான நிலையில் தான் வாகன துறையினருக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, பட்ஜெட் 2021ல் வாகன அழிப்பு திட்டம் பற்றி அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த வாகன அழிப்பு திட்டம் மூலம், இந்தியாவின் வாகன துறையின் வருவாய் 4.5 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். அதோடு 35,000 மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் ஒரு அறிக்கையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
பழைய வாகனங்களால் காற்று மாசு ஏற்படுவதை தடுப்பதற்கு மத்திய அரசு இந்த புதிய வாகன கொள்கையை கொண்டு வந்தது.
மத்திய அரசின் புதிய கொள்கை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி தமிழகத்திலும் விரைவில் அந்த கொள்கை அமலுக்கு வர இருக்கிறது.
இதன்படி 15 ஆண்டுகளான வணிக வாகனங்கள் மற்றும் 20 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட தனியார் வாகனங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாடு முழுவதும் 51 லட்சம் தனியார் வாகனங்களும், 17 லட்சம் வணிக வாகனங்களும் ஆக மொத்தம் 68 லட்சம் வாகனங்கள் சாலைகளில் ஓடுவதற்கு தகுதியற்றவை என அறிவிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் தனியார் மற்றும் வணிக வாகனங்கள் இரண்டும் சேர்த்து மொத்தமாக 16 லட்சம் வாகனங்கள் தகுதியற்ற வாகனங்களாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
அப்போது வணிக வாகனங்கள் 15 ஆண்டுகளை கடந்து இருந்தால் அது பறிமுதல் செய்யப்படும். தனியார் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் ஓட்டப்பட்டு இருந்தால் அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ய உள்ளனர். அது போன்ற நிலை ஏற்படும் போது சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி போலீசார் அதன் வயதை பரிசோதிப்பார்கள்.
இதுபோன்ற வாகனங்களை இனி ஓட்ட முடியாது. இனி அவற்றை காயலாங்கடைக்கு தான் போட வேண்டும். இதுபோன்ற வயது முதிர்ந்த வாகனங்களுக்கு பதில் புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு சலுகை அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
அதாவது, அரசின் இந்த வாகன அழிப்பு திட்டத்தின் கீழ் தங்களது பழைய வாகனங்களை கொடுத்து, புதிய வாகனங்கள் வாங்குபவர்கள் வலுவான சலுகையை பெறுவார்கள். குறிப்பாக உற்பத்தியாளர்களிடம் ஸ்கிராப்பிங் செய்யும்போது, புதிய வாகனத்தினை பெறும்போது 5% தள்ளுபடி கொடுக்க அனைத்து வாகன உற்பத்தியாளார்களுக்கும் நாங்கள் ஆலோசனை வழங்கியுள்ளோம் என மக்களைவையில் கட்கரி கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது..
மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கையால் புதிய வாகனங்களின் எண்ணிக்கை பெருகி காற்று மாசு கட்டுக்குள் வரும் என்பதே அனைத்து தரப்பினரின் எண்ணமாக உள்ளது.
சலுகைகள் மட்டும் அல்ல, பழைய வாகனங்களை தாமாக முன்வந்து ஸ்கிராப்பிங்காக கொடுப்பவர்களுக்கு, ஸ்கிராப்பிங் சான்றிதழையும் வழங்கும். மேலும் ஸ்கிராப்பிங் செண்டர்கள் வழங்கும் பழைய வாகனத்தின் ஸ்கிராப் மதிப்பானது, புதிய வாகனத்தின் எக்ஸ் ஷோரூம் விலையில் சுமார் 4 - 6% இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தனி நபர் வாகனங்களுக்கு 25% வரையிலும், வர்த்தக வாகனகளுக்கு 15% வரையிலும் வரி சலுகை அளிக்கப்படலாம். அத்தோடு இந்த பழைய வாகனங்களை ஸ்கிராப்பிங் செய்த சான்றிதலை வைத்துள்ளவர்களுக்கு, புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது பதிவு கட்டணமும் தள்ளுபடி செய்யப்படலாம்.
பழைய வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால், அவற்றை, தொடர்ந்து பயன்படுத்த அவை முதலில் பயன்படுத்த தகுதியானவை என நிரூபிக்க வேண்டும். இதற்காக வாகனங்கள் Automated Fitness Centres மூலம் பிட்னஸ் சான்றிதழை பெற வேண்டும். இதன் பிறகே உங்கள் பழைய வாகனத்தினை நீங்கள் இயக்கிக் கொள்ள முடியும். இந்த நிலையில் அரசு Automated Fitness Centresகளை அரசு மூலமாகவோ அல்லது தனியார் மூலமாகவோ, அல்லது வாகன நிறுவனங்கள் மூலமாகவோ ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளது
அரசின் இந்த வாகன ஸ்கிராப்பிங் திட்டத்தினால் புதிய வாகனங்களின் தேவை அதிகரிக்கும். இதனால் புதிய வாகனங்கள் மேலான ஆர்வம் அதிகரிக்கும். இதனால் புதிய வாகனங்களுக்கான தேவையும் கூடும். அதோடு சுற்றுசூழல் பாதிப்பும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக, வாகன நிறுவனங்கள் தற்போது சில சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.
பழைய வாகனங்களுக்கு பசுமை வரி, எட்டு வருடங்கள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படுகையில், சாலை வரியில் 10 முதல் 25% பசுமை வரியாகப் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இதே தனியார் வாகனங்கள் 15 வருடங்களுக்குப் பிறகு பதிவு சான்றிதழை புதுப்பிக்கும்போது. இந்த பசுமை வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
அரசின் இந்த வாகன அழிப்பு திட்டம் ஏப்ரல் 1, 2022 முதல் அரசு மற்றும் பொத்துறை நிறுவனங்களின் வாகனங்களுக்கு அமலுக்கு வருகின்றது. எனினும் தனியார் வாகனங்களுக்கு எப்போது முதல் அமல் என்று தெளிவாக தெரியவில்லை. அரசின் இந்த திட்டம் பழைய மற்றும் குறைபாடுள்ள வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும், மாசுபாட்டை குறைக்கவும் இந்த வாகன அழிப்பு திட்டம் பயன்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் வாகன தொழில்துறையும் மேம்படும்.
உண்மையில் இது துவண்டு போன நிலையில் உள்ள வாகன துறைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும். அதோடு பழைய வாகனங்களையும் கொடுப்பவர்களுக்கு பல சலுகைகளும் உள்ளதால், இது சற்று ஆறுதல் கொடுக்கும். எப்படியிருந்தாலும், இது முழுமையாக அமல்படுத்தப்படும்போது தான் சாதக பாதங்கள் முழுமையாக தெரியவரும்.
இதுகுறித்து, லாரி உரிமையாளர்கள் சார்பில் கூறியதாவது, பழைய வாகனங்கள் மூலம் காற்று மாசு ஏற்படுவதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்கு முழு வரவேற்பு அளிக்கிறோம். அதே நேரத்தில் பழைய வாகனங்களாக இருந்தாலும் அதிகம் பயன்படுத்தாமல் சில வாகனங்கள் சாலைகளில் ஓட்டுவதற்கு தரமான வாகனங்களாக இருக்கும். எனவே வாகனங்களை பரிசோதனை செய்து தகுதியுள்ள வாகனங்களை ஓட்டுவதற்கும் அனுமதிக்க வேண்டும்.
மத்திய அரசும் இதனை கருத்தில் கொள்வதாக கூறி உள்ளது. நாங்களும் இந்த நேரத்தில் அதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பழைய வாகனங்கள் கர்நாடகாவில் அதிகம் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. அங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்கள் 39 லட்சத்துக்கும் மேல் உள்ளன. டெல்லியில் 36 லட்சம் பழைய வாகனங்களும், உத்தரபிரேதசத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களும், கேரளாவில் 20 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களும் உள்ளன. தமிழகத்தில் 16 லட்சம் வாகனங்கள் இருக்கும் நிலையில் பஞ்சாபில் 15 லட்சம் வாகனங்கள் உள்ளன.

No comments
Thank you for your comments