காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்கு முடக்கம் -மத்திய அரசின் அழுத்தமா?
புதுடெல்லி:
இந்தியா முழுவதும் உள்ள தங்கள் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் 5000 கணக்குகளை டிவிட்டர் முடக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவு தலைவர் ரோகன் குப்தா குற்றம்சாட்டி உள்ளார்.
விதிமுறைகளை மீறியதாக கூறி காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கி உள்ளது. இத்தகவலை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாகவும், அதன்படி டிவிட்டர் செயல்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவு தலைவர் ரோகன் குப்தா குற்றம்சாட்டி உள்ளார்.
‘ஏற்கனவே இந்தியா முழுவதும் உள்ள எங்கள் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் 5000 கணக்குகளை டிவிட்டர் முடக்கியுள்ளது. எங்களுக்கு டிவிட்டர் நிறுவனமோ அல்லது அரசாங்கமோ அழுத்தம் கொடுக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்றும் குப்தா கூறி உள்ளார்.
டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியபோது எடுத்த புகைப்படத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டிவிட்டரில் பதிவிட்டார். இது போக்சோ சட்ட விதிமுறைகளை மீறும் செயல் என்பதால், சமீபத்தில் அவரது டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘மோடி ஜி, நீங்கள் எவ்வளவு பயப்படுகிறீர்கள்? காங்கிரஸ் கட்சி நாட்டின் விடுதலைக்காக போராடிய கட்சி. உண்மை, அகிம்சை மற்றும் மக்களின் விருப்பத்தை மட்டுமே கொண்டுள்ளது. நாங்கள் வெற்றி பெற்றோம், மீண்டும் வெல்வோம்’ என காங்கிரஸ் கட்சி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் பரபரப்பாக எதிரொலித்ததையடுத்து, உடனடியாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
No comments
Thank you for your comments