ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகை- 5 அடிக்கு பாதுகாப்பு
சென்னை, ஆக.2-
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் இன்று திறக்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகை தருகிறார்.
நாடு விடுதலை அடைவதற்கு முன்னதாக மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் கீழ் 1920-ம் ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. அப்போது அரசியல் அதிகாரங்கள் கோரி காங்கிரஸ் கட்சி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தி வந்தது. அதனால் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. சென்னை மாகாண பொதுத்தேர்தலில் நீதிக்கட்சி 98 இடங்களில் போட்டியிட்டு 63 இடங்களில் வென்றது.
நீதிக்கட்சியின் சுப்பராயலு ரெட்டியார் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வரானார். இதனடிப்படையில் 1921-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபை உருவாக்கப்பட்டது. இதனடிப்படையில் சட்டசபை நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடுகிறது.
சட்டசபை நூற்றாண்டு விழா தொடர்பாக பல்வேறு கருத்துகளும் விவாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. நாடு விடுதலை அடைந்த பிறகு 1952-ல் நடத்தப்பட்ட முதல் பொதுத்தேர்தலில் இருந்துதான் சட்டசபையின் காலத்தை வரையறுக்க வேன்டும். அப்படியானால் சட்டசபைக்கு வயது 69தான் என ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில், சட்டசபை நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் கனஜோராக செய்யப்பட்டு வருகின்றன. இந்த சட்டசபை நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று பிற்பகல் 12.45 மணிக்கு சென்னை வந்தடைகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். அதைத் தொடர்ந்து மாலை 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சட்டசபை விழா நிகழ்விடத்துக்கு மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தருகிறார்.
சுமார் 7 ஆயிரம் போலீசார்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி சென்னையில் சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர் செல்லும் வழியில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவர். குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி இருந்தனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி, சென்னையில் தலைமை செயலகம் நேற்றே முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு அதிவிரைவுப்படையினர், போக்குவரத்து காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என 500க்கும் மேற்பட்ட காவலர்கள் 5 துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மோப்பநாய் நாய் கொண்டு கோட்டை முழுவதும் சோதனையிடப்படுவதுடன், வாகனங்கள் மிகுந்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. மேலும் தகுந்த அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். குடியரசுத் தலைவரை வரவேற்கும் விதமாக காவலர்கள் வாகன பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.
முக்கிய நபர்களுக்கு மட்டுமே அழைப்பு...
தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட ஒரு சில உயர் அதிகாரிகள் மட்டுமே நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் சட்டமன்ற செயலாளர்கள், பத்திரிகையாளர்கள் 30 பேர் என 320 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் அமரும் முதல் வரிசை, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியினர் அமரும் முதல் வரிசையில் உள்ள நாற்காலிகள் எடுக்கப்பட்டு அதற்கு பதிலாக 2 மீட்டர் இடைவெளியில் அமரும்படி இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி அவர்கள் படத்திற்கு கீழ் "காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
5 அடுக்கு பாதுகாப்பு
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
ஊட்டி பயணம்
கருணாநிதி உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் மீண்டும் கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று இரவு தங்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுநாள் காலை விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி செல்கிறார். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தை வந்தடையும் அவர் ஆளுநர் மாளிகை சென்று தங்குகிறார்.
குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி ராணுவ அதிகாரிகளுடன் ஆகஸ்ட் 4-ம் தேதி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். ஊட்டியில் உள்ள சுற்றுலாதலங்களை ஆகஸ்ட் 5-ம் தேதி அவர் பார்வையிடுவதுடன் பழங்குடி மக்கள் கிராமங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். ஊட்டி ஆளுநர் மாளிகையில் ஆகஸ்ட் 6ம் தேதி வரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தங்குகிறார்.
ஏற்கனவே ஊட்டி ஆளுநர் மாளிகை ஊழியர்கள் மொத்தம் 450 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. ஊட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஊட்டி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1200 போலீசார் குடியரசுத் தலைவர்யின் பாதுகாப்பு பணிக்காக நீலகிரி மாவட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மாநில போலீசாரும் நீலகிரியில் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்படுகின்றனர்.


No comments
Thank you for your comments