50 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்... விவசாயிகள் வேதனை... நெல் கொள்முதல் நிலையம் திறப்பு...
விருத்தாச்சலம்
விருத்தாச்சலம் அடுத்த சி.கிரனுர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், 50 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அதிகாரிகள் திறக்கவில்லை என குற்றச்சாட்டு.
மழையால் நெல்மணிகள் மறு முளைப்பு ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் வேதனை.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சி.கிரனூர் கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அறிவிப்பினால், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்த வண்ணம் உள்ளனர்.
கடந்த 10நாட்களுக்கு மேலாக விவசாயிகள் நெல்மணிகளை குவியல் குவியலாகக் குவித்து வரும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், அவ்வப்போது பெய்து வந்த கனமழையால், நெல்மணிகள் தண்ணீரில் ஏற்பட்டு விட்டதாகவும், இரவு பெய்த கன மழையால், சுமார் 50000 மூட்டை, கொள்முதல் செய்யம் அளவிலான நெல்மணிகள் மழையில் நனைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம், விவசாயிகள் 10 நாட்களாக முறையிட்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கான, எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்றும், மூட்டை ஒன்றுக்கு 50 முதல் 55 ரூபாய் வரை அதிகாரிகள் லஞ்சமாக கேட்பதாகவும், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு, பின்னர் 45 ரூபாய் மூட்டைக்கு தருவதாக விவசாயிகள் சம்மதித்த பின்னரும் அதிகாரிகள் திறக்காமல் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கனமழை பெய்வதால், நெல்மணிகள் ஈரப்பதம் அடைவதை தவிர்ப்பதற்காக, வெயிலில் உலர்த்தும் பணியில் ஈடுபடும் ஆட்களுக்கு கூலி, நெல்லை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் தார் பாயின் வாடகை கூலி, சாப்பாடு மற்றும் இதர செலவுகள் என நாள்தோறும் ஒவ்வொரு விவசாயிகளும் 3 ஆயிரம் ரூபாய் செலவு செய்வதாக வேதனையுடன் கூறுகின்றனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரி, நெல்லை கொள்முதல் செய்யும் இயந்திரத்தை, வைத்து, தேங்காய், சூடம் ஏற்றி பூஜை செய்துவிட்டு போனவர், மீண்டும் திரும்ப வரவில்லை என்றும், நாள் தோறும் விவசாயிகளான நாங்கள் தான் எங்களின் தலையெழுத்தை எண்ணி, கையெடுத்து நெல் கொள்முதல் செய்யும் இயந்திரத்தை கும்பிட்டு வருகிறோம் என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
50 ஆயிரம் நெல் மூட்டைகளுடன் காத்து கிடப்பதாகவும், மழையில் நனைந்து நெல்மணிகள் மறுமுளைப்பு ஏற்பட்டு விட்டதாகவும், அதிகாரிக்கு 45 ரூபாய் முட்டைக்கு தருவதாக சம்மதித்த பின்னரும், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் தங்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டதாக கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திறக்காவிட்டால் விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், முன்னதாக கடலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் பொருட்களை விற்பனை செய்வதற்காக, மாவட்டம் முழுவதும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்து வைத்தார்
இந்த நேரடி அரசு கொள்முதல் நிலையத்தில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்த பயனடைவார்கள்.
இதில் விருத்தாசலம் சார் ஆட்சியர் அமித்குமார், சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், விருத்தாசலம் வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments