நடிகர் தனுஷுக்கு 48 மணி நேரம் கெடு.... உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
சென்னை:
வெளிநாட்டு ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கான இறக்குமதி நுழைவு வரி பாக்கி 30,30,757 ரூபாயை 48 மணிநேரத்திற்குள் செலுத்த நடிகர் தனுஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிப்பிலிருந்து விலக்கு கேட்டு, கடந்த 2015ம் ஆண்டு நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உத்தரவிட்டது.
நேற்று நடிகர் விஜயின் வழக்கை விசாரித்த தனி நீதிபதி சுப்ரமணியம் முன்பு, தனுஷ் தரப்பில் யாரும் ஆஜராகாததால், இந்த வழக்கின் விசாரணை இன்று நடத்தப்பட்டது. அப்போது, இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி விதிப்பிலிருந்து விலக்கு கோருவது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் தனுஷுக்கு கண்டனம் தெரிவித்தது.
நீதிபதி காட்டமான கேள்வி
சோப்பு, பெட்ரோல் வாங்கும் சாமானிய மனிதர்கள்கூட வரி செலுத்துகின்றனர், கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கிறீர்கள் எனவும் நீதிபதி சுப்ரமணியம் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவில் சாமானிய மனிதர்களுக்கு ஒரு சட்டம், நடிகர் தனுஷுக்கு ஒரு சட்டம் என்று இல்லை என்று காட்டமாக கூறிய நீதிபதி சுப்பிரமணியம், நடிகர் என்பதை தெரிவிக்காமல் நுழைவு வரி விலக்கு கேட்டது ஏன்? எனவும், இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தனுஷுக்கு உத்தரவை பிறப்பித்தார்.
வணிகவரித் துறைக்கு உத்தரவு
நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி விபரங்களை இன்று பிற்பகல் தாக்கல் செய்யுமாறு வணிகவரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நிலுவை வரி தொடர்பான விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
48 மணி நேரம் கெடு
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி பாக்கி 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாயை 48 மணி நேரத்திற்குள் செலுத்த நடிகர் தனுஷுக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் நேரம் வீண்
வரி செலுத்துவது ஒவ்வொருவருடைய கடமை எனச் சுட்டிக் காட்டினார் நீதிபதி சுப்ரமணியன், சொகுசு கார்களுக்கு வரி விலக்கு கோருவது போன்ற வழக்குகளால் நீதிமன்றத்தின் நேரம் வீணாவதாக நீதிபதி சுப்ரமணியன் தெரிவித்தார்.

No comments
Thank you for your comments