வாலாஜாபாத் அருகே 14 மற்றும் 15ம் நூற்றாண்டை சார்ந்த இரண்டு சதி கற்கள் கண்டுபிடிப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்திலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் உள்ளது ஊத்துக்காடு கிராமம் இக் கிராமத்தில் 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இரண்டு சதிகற்களை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் கொற்றவை ஆதன் கண்டறிந்துள்ளார்
இதுகுறித்து அவர் கூறியதாவது,
வாலாஜாபாத்தை சேர்ந்த ஆட்டோவாசு மற்றும் ரமேஷ் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் ஊத்துக்காடு கிராமத்தை கள ஆய்வு செய்தபோது அக்கிராமத்திலிருந்து கட்டவாக்கம் செல்லும் சாலையில் பெரியாண்டவர் கோவிலுக்கு அருகே சாலையோரம் இந்த இரண்டு சதிகற்களை கண்டறிந்தோம்.
இதில் ஒன்று மண்ணில் புதைந்து காணப்பட்டது அதை எடுத்துநீர் ஊற்றி சுத்தம் செய்து அங்கேயே ஒரு வேப்பமரத்தடியில் வைத்துள்ளோம். இது 15ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்
சதிக்கல் என்றால் என்ன?
சதிக்கல் என்பது ஒரு வீரன், தன் இனக் குழுவைக் காக்கவோ, ஊரைக் காக்கவோ, நாட்டைக் காக்க போர்களத்தில் வீரமரணம் அடைந்தால் இறந்த அவ்வீரனின் உடலுக்கு தீ மூட்டி சடங்குகள் செய்து அந்தத் தீயில் அவனின் மனைவியும் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொள்வாள். இந்நிகழ்விற்கு சதி என்று பெயர்.
அவ்வாறு உயிர்விட்ட தம்பதியரின் நினைவைப் போற்றும் வகையில் அந்த தம்பதியரின் உருவங்களை ஒரு கல்லிலில் சிற்பமாக செதுக்கி வைத்து அந்தக் கல்லை நட்டு வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். இந்தக் கற்களுக்கு சதி கற்கள் என்று பெயர்.
இது குறித்த குறிப்புகள் பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கிய நூலான புறநானூறு ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன இப்பழக்கம் வீரன் இயற்கை மரணம் அடைந்தாலும் பின்பற்றப்பட்டது.
14 ஆம் நூற்றாண்டு
நாங்கள் கண்டறிந்த ஒரு சதி கல்லானது சாலையோரம் இருந்தது. அது ஒன்றரை அடி உயரமும் ஒரு அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதில் வலது பக்கம் வீரனின் உருவம் காணப்படுகிறது.
வீரனின் தலையில் உள்ள கொண்டை நேராகவும் காதில் நீண்ட காதனிகளும் கழுத்தில் மணியாரமும் மற்றும் தோள்களில் வாகு வளையங்கள் கைகளில் காப்பு ஆகியவை காணப்படுகின்றன மேலும் அவரதுஇடது கையில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கைப்பிடி கொண்ட ஒரு போர்வாளை கீழ்நோக்கிய நிலையில் வைத்துள்ளார்.
அவரது கைகள், வணங்கிய நிலையில் காட்டப்பட்டுள்ளது மேலும் அவர் உடலுக்கு பட்டாடையும் கால்களில் வீரக்கழலும் உள்ளது .
இடப்பக்கம் வீரனின் மனைவி வணங்கிய நிலையில் காணப்படுகிறார். அவரது கொண்டை இடப்பக்கமாக சாய்ந்த நிலையிலும் காதுகளில் மற்றும் கழுத்துகளில் அணிகலன்கள் கைகளில் வளையல்கள் மற்றும் உடலுக்கு பட்டாடை ஆகியவை உள்ளது இது 14ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் வீரன் கையிலுள்ள போர்வாள் தரையை நோக்கி காட்டப்பட்டுள்ளதால் இவ்வீரன் இயற்கை மரணம் அடைந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம். இது சோழர்களின் இறுதிக் கால மாக இருக்க வாய்ப்பு உள்ளது.
15 ஆம் நூற்றாண்டு
இதற்கு அருகிலேயே மண்ணில் புதைந்த நிலையில் ஒரு பலகைக்கல் இருந்தது. அதை தோண்டி எடுத்து சுத்தம் செய்து பார்த்தபோது அது 15 ஆம் நூற்றாண்டை சார்ந்த சதிக்கல் என்பதை உறுதி செய்தோம்.
2 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட இந்த சதிக்கல்லில் வலதுபக்கம் இறந்த வீரனின் உருவமும் இடது பக்கம் வீரனின் மனைவி தனது வலக்கையில் மலரை ஏந்திய நிலையில் காணப்படுகிறார்.
அவரது கொண்டை வலப் பக்கம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இவர்கள் ஒரு பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக அழகாக காட்சியளிக்கிறார்கள்.
இவர்களுக்கும் காது கழுத்து தோள் கை மற்றும் கால்களில் அதற்குரிய அணிகலன்கள் காட்டப்பட்டுள்ளன இது விஜய நகர மன்னர்கள் காலத்தை சார்ந்ததாகும்.
ஒரே ஊரில் இரண்டு சதிகற்கள் அதுவும் அருகருகில் கிடைத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதலாம்.
ஊத்துக்காடு என்பது பல்லவர் காலத்திய ஊராகும்.
இங்குள்ள லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் கிபி 968ல் விஜய கம்பவர்ம மன்னரது கல்வெட்டு காணப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலங்களில் இவ்வூருக்கு ஊற்றுக்க்காடு என்று பெயர்.
சோழ மன்னர்களான முதலாம் பராந்தகன் மற்றும் முதலாம் இராஜராஜன் ஆகியோரது கல்வெட்டுக்களும் இவ் ஊரில் உள்ளன .
சோழர் காலத்தில் ஊற்றுகாட்டை தலைமையிடமாகக் கொண்டு ஊற்றுக்காடு கோட்டம் இயங்கியது இக்கோட்டத்தில் தான் காஞ்சிபுரமே ஓர் ஊராக இருந்துள்ளது இதன்மூலம் இவ்வூரின் சிறப்பை அறியலாம். காலப்போக்கில் இவ்வூரின் பெயர் மருவி ஊத்துக்காடு என்று அழைக்கப்பட்டு வருகிறது
மேலும் இவ்வூரில் மிகப்பெரிய கோட்டை ஒன்றும் இருந்துள்ளது. இவ்விரு சதிக்கற்களும் கோட்டை இருந்த இடத்திற்கு அருகில் கிடைத்துள்ளதாலும் இறந்த தம்பதியர்களின் சிற்பங்களின்மீதுள்ள ஆடை அணிகலன்கள் மற்றும் போர்வாளின் உருவ அமைப்பை கொண்டு இறந்த ஆண்கள் இருவரும் படைத்தளபதி அல்லது முக்கிய பொறுப்பில் உள்ளவராக இருந்திருக்க வாய்ப்புள்ளது எனக் கருதவேண்டியுள்ளது.
இவ்வளவு சிறப்புமிக்க வரலாற்றுச்சின்னங்கள் யாரும் கவனிப்பாரற்று சாலையோரம் அழிந்து போகும் நிலையில் உள்ளது.
கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு அடையாளமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த அரியவரலாற்று கலை பொக்கிஷங்களை தமிழக தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாத்திட வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் எண்ணமாகும் என்று அவர் தெரிவித்தார்
No comments
Thank you for your comments