வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!
சென்னை:
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.. அத்துடன், இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கும் ஒத்திவைத்துள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு சில மணி நேரம் முன்பு, முழுக்க முழுக்க அரசியல் லாபத்திற்காக சட்டம் இயற்றப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள், கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. அதில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், 1983ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தியது. அந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் மீண்டும விசாரணைக்கு வந்தது.
அப்போது, வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் நியமனங்கள் நடந்து வருவதால், அதை தடுக்கும் வகையில் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது...
ஆனால், அரசு தரப்பிலோ, "அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது... உள் ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை. அதனால், சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டிய அவசியமும் இல்லை" என்று வாதிடப்பட்டது.
இடைக்கால கோரிக்கை மீதான வாதங்களை இன்று முன்வைக்க, இரு தரப்புக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், அப்போது, இடைக்கால உத்தரவு குறித்து இறுதி முடிவு எடுப்பதாக தெரிவித்திருந்தனர்..
அதன்படியே இன்று இவ்வழக்கு தொடர்பாக நீதிபதிகள் தெரிவிக்கும்போது, "ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற முயற்சி நடந்துள்ளதால், ஆரம்ப நிலையில் தடை உத்தரவு கோர முடியாது என கூற முடியாது என்றும், சில கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. மற்ற நிறுவனங்கள் முன்னேற்றத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த சட்டத்தால் பயனடைபவர்களுக்கு இந்த வழக்கு பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டதுடன், இந்த சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் உத்தரவிட்டு, இறுதி விசாரணையை வரும் செப்டம்பர் 14 தள்ளி வைத்துள்ளனர்.
No comments
Thank you for your comments