Breaking News

வேலூரில் அனுமதியின்றி இயங்கும் நீச்சல் குளம்..!

வேலூர், ஜூலை 28-

வேலூர் சங்கரன்பாளையம் பகுதி டிகேஎம் கல்லூரி சாலையில் சத்தமின்றி நீச்சல் குளங்கள் இயங்கி வருகின்றன. இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி 3வது மண்டல அலுவலர்கள் மௌனமாக இருந்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது.  


வேலூர் சங்கரன்பாளையம் பகுதியில் உள்ள டிகேஎம் கல்லூரி சாலை தெருவில் மாடி பகுதியில் 2 நீச்சல் குளங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளன. இதற்கு அனுமதியின்றி போன விவகாரம் ஒருபுறம் இருக்க சத்தமின்றி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக உள்ளது என்று விளம்பரம் செய்து நீச்சல் குளங்கள் தைரியமாக இயங்கி வருகிறது. இந்த நீச்சல் தொட்டிக்கு கீழ் தளத்தில் உள்ள பகுதியில் தண்ணீர் சொட்டு சொட்டாக கசிவதாக புகார்களும் எழுந்துள்ளன. இருந்தாலும் இதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் நீச்சல் குளங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தைரியமாக இடைவிடாது இயக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. 

அத்துடன் இந்த நீச்சல் குளத்தில் குளிக்க வருவோர் கொண்டு வரும் வாகனங்கள், வாகனம் நிறுத்தம் வசதி இல்லததால், சாலையில் வாகனங்களை நிறுத்தி சாலை அடைத்து கொள்கின்றனர். இதனால் இந்த பகுதி வழியாக வாகனங்கள், பொதுமக்கள் செல்ல இடையூறாக உள்ளது என்று அப்பகுதி மக்கள்  புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் மாநகராட்சி 3வது மண்டல அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்துக்கு தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை என்னவோ இதுவரை எடுக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. முறைகேடாக இயங்கும் நீச்சல் குளத்திற்கு நிரந்தரமாக சீல் வைக்க மாநகராட்சி மண்டல அதிகாரிகள் முன்வரவில்லை. போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, நீச்சல் குளம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளது மாநகராட்சி 3வது மண்டல அலுவலர்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. 

நீச்சல் குளம் நடத்துவோரிடம் ஒரு கணிசமான தொகையை மாநகராட்சி அலுவலர்கள் கையூட்டாக பெற்றுள்ளனர் என்பது மட்டும் உறுதிபட தெரியவந்துள்ளது.

பொதுமக்களுக்கு சேவை செய்வது, வசதிகளை செய்து தருவது மாநகராட்சியின் வேலையா? ஏதோ ஒரு தனி நபருக்கு ஒரு தனியார் முதலாளிக்கு வசதி செய்து தருவதுதான் மாநகராட்சியின் பணியா? என்பது தெரியவில்லை. 

மக்களுக்காக மாநகராட்சியா? தனி நபருக்காக மாநகராட்சியா? என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது. 

நாளடைவில் இந்த நீச்சல் குளம் இடிந்து விழுந்தால் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் குடியிருப்போர் தங்களது இன்னுயிரை துறக்க வேண்டியிருக்கும். இந்த அசம்பாவிதம் ஏற்படாத வரையில் மாநகராட்சி அலுவலர்கள் தப்பி விடுவர். ஆனால் அசம்பாவிதம் ஏற்பட்டால் மாநகராட்சி நிர்வாகம் தார்மீக பொறுப்பேற்றுக் கொள்ளுமா?. இழந்த உயிர்களை மீட்டுத் தருமா? என்பதுதான் ஒன்றும் அறியாத அப்பாவி பொதுமக்களின் கேள்வியாகும். 

இந்த நீச்சல் குளத்தை நிரந்தரமாக இழுத்து பூட்ட வேண்டும் என்பதுதான் இப்பகுதி வாழ் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இந்த நீச்சல் குளத்தினால் பொதுமக்களுக்கு இருவேறு வகையில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அதாவது போக்குவரத்து பாதிப்பு, உயிருக்கு உத்தரவாதம் அளிப்பது யார்? என்பதுதான். ஆனால் மாநகராட்சி அலுவலர்கள் ஏதோ ஒன்றும் அறியாதவர்கள் போன்று இந்த பிரச்னையை கொண்டு சென்றால் கண்டும் காணாமல் அமைதி காக்கின்றனர். 

இதிலிருந்தே நீச்சல் குளம் நடத்தும் உரிமையாளரிடம் இருந்து ஒரு பெரிய தொகையை (லகரம்) ஆட்டையை போட்டுள்ளனர் 3வது மண்டல அலுவலர்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது. 

ஆதலால் மாநகராட்சி நிர்வாகம் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பு காக்கப்போகிறதா? அல்லது அசம்பாவிதம் ஏற்பட்ட பின்னர் பார்த்து கொள்ளப் போகிறதா? என்று தெரியவில்லை. 

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன்  நேர்மையான முறையில் கொரோனா கட்டுபாடு என பல்வேறு  பிரச்சனைகளை கையாண்டு பொதுமக்களிடம் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளோர். 

அதேபோன்று இந்த பிரச்னையை கையில் எடுத்து கொண்டு பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் நிரந்தரமாக குடியிருப்பு பகுதியில், பெண்கள் கல்லூரி சாலையில் இயங்கும் நீச்சல் குளத்தை மூடி சீல் வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இனி மாநகராட்சி ஆணையர் சங்கரனின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments

Thank you for your comments