முதல்வரை சந்தித்த நடிகர் வடிவேலு..! - சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரியா?
சென்னை:
முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் வடிவேல் இன்று சந்திப்பு நடத்தினார். மேலும் முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்தை வழங்கினார். இந்த சந்திப்பை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மீண்டும் வடிவேல் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றது.
அரசியலால் சினிமாவை தொலைத்தவர் நடிகர் வடிவேலு. 2011 சட்டசபை தேர்தலில் திமுகவிற்காக பிரச்சாரம் செய்தவர் நடிகர் வடிவேலு. இந்த பிரச்சாரம் காரணமாக வடிவேலுவின் சினிமா வாய்ப்புகள் மொத்தமாக குறைந்தன.
அந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு பின் நடிகர் வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. நன்றாக பீக்கில் இருந்த வடிவேலு அதன் பின் பட வாய்ப்புகள் இன்றி கஷ்டப்பட்டார். பெரிய அளவில் படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை நிலவியது. அதன்பின் ஆளும் கட்சியாக அதிமுக 10 ஆண்டுகள் ஆண்ட நிலையில் வடிவேலுவுக்கு சினிமா வாய்ப்புகள் சுத்தமாக வரவில்லை.
வடிவேலுவின் இடத்தை இவர் நிரப்புவார், அவர் நிரப்புவார் என்று பல ஆருடங்கள் சொல்லப்பட்டன. ஆனால் கடைசி வரையில் வடிவேலுவின் அந்த சிம்மாசனம் அவர் இன்றி காலியாகவே இருந்தது. பின்னர் வடிவேலு கம்பேக் கொடுத்த படங்களும் பெரிய அளவில் ஓடவில்லை. இப்போதும் கூட மீம்களில், காமெடி வீடியோக்களில் வடிவேலுதான் டாப்பில் இருக்கிறார். வடிவேலு இல்லாத இணையத்தையும், மீம் உலகையும் நினைத்து கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தும் வடிவேலு எப்போது கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினை இன்று நடிகர் வடிவேலு சந்தித்தார். முதல்வரிடம் ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்தை வழங்கினார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது கம்பேக் குறித்து பேட்டி அளித்தார். அதில், விரைவில் நல்லதே நடக்கும். நம்புங்கள். தமிழ்நாடு முதல்வரை சந்தித்தது நம்பிக்கை அளிக்கிறது. சந்தோஷம் தருகிறது.
அவரை மரியாதை நிமித்தமாக பார்த்தேன். அவர் மிகவும் சிறப்பாக பணியாற்றுகிறார். அவரின் செயல்பாடு மெய்சிலிர்க்க வைக்கிறது. உலகமே பாராட்டும் வகையிலும், கவனிக்கும் வகையிலும் கொரோனா பரவலை ஸ்டாலின் கட்டுப்படுத்தி இருக்கிறார். அவர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் போல பேசினார்.
கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சத்தை முதல்வரிடம் கொடுத்தேன். முதல்வரின் ஆட்சி பொற்காலமான ஆட்சி. பெண்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
மக்கள் வேக்சின் போட முன் வந்துள்ளனர். மக்களை தன்வசப்படுத்தி, அவர்களை வேக்சின் போட வைத்துள்ளார் ஸ்டாலின். அவர் எத்தனை ஊசி போட சொன்னாலும் நான் போடுவேன். 40 ஊசி போட சொன்னாலும் போடுவேன். இனி நல்லதே நடக்கும், என்று நடிகர் வடிவேல் குறிப்பிட்டுள்ளார்.
வடிவேலுவின் இந்த பேட்டி அவரின் கம்பேக் குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது. விரைவில் மீண்டும் சினிமாவில் அவர் பிஸியாக நடிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த பேட்டி காரணமாக அரசியலில் களமிறங்குவாரோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

No comments
Thank you for your comments