Breaking News

அர்த்த ராத்திரியில் டெல்லிக்கு பறந்த போன்.. சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல் களம்...

சென்னை: 

காங்கிரஸ் கட்சியை திமுக மதிக்கவில்லை என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்று அதிரடியாக கூறியுள்ளாராம்.


காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டங்கள் குறித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், காங்கிரஸின் மேலிட பார்வையாளர் தினேஷ்குண்டுராவ்,  செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், செல்வப்பெருந்தகை, CLP தலைவர்  முன்னிலையில் செயல் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், துணை தலைவர்கள், பொதுச்செயலாளர் & முன்னணி அமைப்புகளின் மாநில தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம்  இன்று (30.07.2021) சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. 

இந்த கூட்டத்தில், திமுகவுக்கு செக் வைக்கும் விதத்தில் பேசியுள்ளார் கே.எஸ்.அழகிரி. அவரது பேச்சு திமுக கூட்டணி ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

முன்னாள் தலைவர் தங்கபாலு பேசும் போது, "50 ஆண்டு கால அரசியலில் கூட்டணியிலும், கூட்டணி இல்லாமலும் காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. அதனாலேயே என்னவோ, 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த காங்கிரசுக்கான வெற்றி, செல்வாக்கு இப்போது இல்லை.  

இனி வரும் காலத்தில் கட்சியை வளர்க்க வெவ்வேறு வியூகங்களை திட்டமிட வேண்டியிருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி..." என்று தங்கபாலு பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டுள்ளார் கே.எஸ். அழகிரி. மைக்கை பிடித்து பேசாமல், மேடையில் அமர்ந்தவாறே, அவர் குறுக்கிட்டு பேசியுள்ளார்.  

அவர் பேசியதாவது, "கூட்டணி எல்லாம் கிடையாதுங்க. கூட்டணிதாங்க நம்மளை பலகீனப்படுத்துது.." என்று அழகிரி சொல்ல மேடையில் இருந்த பலரும் அவரை அதிர்ச்சியுடன் பார்த்துள்ளனர்.  கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அவரது குரல் கேட்க.., அவர்களும் நிமிர்ந்து அழகிரியை கேள்விக்குறியோடு பார்த்தனர். 

அழகிரியை திமுக தலைமை சுத்தமாக புறக்கணிக்கிறது என்கிற விரக்தியில் தான் அவர் அப்படி பேசுவதாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


அழகிரி மைக் பிடித்து பேசும் போது, "கட்சியின் தலைவராக இருந்து எப்படியெல்லாம் உழைத்தேன்.." என்பது உட்பட பல விஷயங்களை ஒவ்வொன்றாக பேசிக்கொண்டே வந்தார்.

அந்த வரிசையில்  கடந்த தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்த நடந்தபோது நடந்த சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதாவது, "உடனே வாங்கன்னு திமுக தலைமையிடமிருந்து தினேஷ் குண்டுராவுக்கு அழைப்பு வந்தது. என்னையும் அழைத்துக்கொண்டு போனார். அப்போ, இத்தனை இடங்கள் தான் என்று நம்மிடம் அவர்கள் வலியுறுத்தினார்கள். எங்களுக்கு அவர்கள் சொன்ன தொகுதிகள் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், கூட்டணி முறியக் கூடாதே என நினைத்தோம்." என்று பொறுமலோடு பேசியுள்ளார் அழகிரி.

மேலும் அழகிரி பேசுகையில், "திமுக தரப்பு சொன்ன தொகுதிகளை கேட்டு அதிர்ச்சியானதும், உடனே அந்த அர்த்த ராத்தியில் சோனியா மேடத்தை ராகுல்காந்தியையும் தொடர்பு கொண்டு பேசினார் தினேஷ். அவங்களும் சில விஷயங்களை சொன்னார்கள். கடைசியில் வேறு வழியில்லை ஒப்புக்கொள்ளுங்கள் என டெல்லியிலிருந்து சொன்னதும் ஒப்புக்கொண்டோம். வேறு என்ன செய்வது..?" என்று விரக்தியோடு பேச்சை முடித்துள்ளார் அழகிரி. 

காங்கிரசை, கடந்த தேர்தலில், திமுக ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்கிற தொனி அழகிரியின் பேச்சில் இருந்தது என்கிறார்கள் கதர்ச் சட்டையினர். 

இந்த கூட்டத்தில், செல்வப்பெருந்தகை பேசும்போது, குறிப்பிட்ட பத்திரிகையின் பெயரை சொல்லி, எவ்வளவு ரகசியமாக நாம் பேசினாலும் பத்திரிகைக்கு செய்தி போய்டுது. பத்திரிகைகளுக்கு நியூஸ் கொடுக்கக்கூடாது. இங்கு பேசறது எதுவும் பத்திகைகளுக்குப் போகக்கூடாது என்று சொன்னவர்.., வழக்கம் போல சீமானை பற்றியும் பேசினார்.

நமது தலைவர் ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கதான்னு சீமான் பேசிக்கிட்டே இருக்கார். அவருக்கு எந்த பதிலடியும் காங்கிரஸ் தருவதில்லை. இனி அப்படியெல்லாம் இருக்ககூடாது. காங்கிரஸ் வளரணும்னு நம் தொண்டர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்னு செய்யணும். இனி நிறைய பண்ணுங்க. எது வந்தாலும் நான் பார்த்துக்கிறேன். அதிகாரிகளால் பிரச்சனைன்னா சொல்லுங்க.., நான் சி.எம்.கிட்டே நான் பேசறேன், அதிகாரிகள்கிட்ட நான் பேசறேன், பயப்பட வேணாம், கட்சியை வளர்க்கணும்னா போராடித்தான் ஆகணும் என்று ஆவேசமாக பேசினார். 

இறுதியில் ஊடகங்களுக்கு யாரும் தகவல் தரக்கூடாது என்பது உள்பட 8 தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

2016 சட்டசபை தேர்தலில் கலைஞர் கருணாநிதி தலைமையில் திமுக தேர்தலை சந்தித்தபோது காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  அதே போன்று தற்போது இந்த ஆண்டு  நடைபெற்ற தேர்தலில்  கண்டிப்பாக அந்த அளவுக்கு அல்லது அதைவிட ஒரு சில சீட்கள் குறைந்தால் பரவாயில்லை என்ற மன நிலையில் காங்கிரஸ் இருந்தது. 

ஆனால், தமிழக சட்டமன்றம்-2021 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றது.   தொகுதிகளில் தான் தர முடியும் என்று திமுக கறாராக தெரிவித்துவிட்டது.   ஆரம்பத்தில் இதைவிடவும் குறைவாகத்தான் காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்கியது திமுக. ஆனால் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்த அழகிரி கண்களில் கண்ணீர் வந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. அந்த அளவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மனது புண்பட்டதாக கூறப்பட்டது. 

ஆனால் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவது காங்கிரசுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்பதால் 25 தொகுதிகளை வாங்கிக்கொண்டு போட்டியிட்டது காங்கிரஸ்.

திமுக கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளின் தொகுதிகள் மற்றும் வெற்றி ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தால் காங்கிரசின் வெற்றி சதவீதம் அனைத்து கட்சிகளை விடவும் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 25 தொகுதிகளில் 18 தொகுதிகளை கைப்பற்றிவிட்டது காங்கிரஸ்.  இந்த நிலையில்தான் உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து களமிறங்கும் முடிவுக்கு காங்கிரஸ் தலைவர் அழகிரி வந்திருப்பதை இந்த பேச்சு உணர்த்துகிறது. ஆனால் இதற்கு காங்கிரஸ் தலைமை ஒப்புக் கொள்ளுமா என்பதுதான், மில்லியன் டாலர் கேள்வி.

கரைந்து வரும் காங்கிரஸை இழுத்து பிடித்து  வளர்ச்சி பாதையில் வைத்து இருக்கிறது திமுக என்று சொன்னால் மிகையாகாது. திமுகவுடனான கூட்டணியே காங்கிரஸ் 18 கைப்பற்றி உள்ளது என்கின்றனர் அரசியல் விமர்ச்சகர்கள். இதை உணர்ந்து காங்கிரஸ் மேலிடம் செயல்பட வேண்டும்.... என்று அரசியல் நோக்கர்களும்... திமுக கூட்டணி கதர் சட்டடை ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்... 


No comments

Thank you for your comments