9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு..! - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
சென்னை:
தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் தொடர்ந்து இயங்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது . இந்த வருடம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத அளவுக்கு நிலைமை மோசமானது. எனவே பள்ளிகளை திறப்பது பற்றி யோசித்து கூட பார்க்கமுடியாத நிலை ஏற்ப்பட்டது.
ஆன்லைன் வசதி இல்லாததால் பல மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழல் நிலவுகிறது. கல்விக் கட்டணம், பெற்றோர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு என பல மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். ஆன்லைன் மூலமாக கல்வி கற்பவர்களும் கடுமையான மனச் சோர்வுக்கு ஆளாவதாக மருத்துவ வல்லுநர்களே கூறுகின்றனர்.
இந்த சூழலில் தமிழ்நாட்டில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,
ஒரு தவணை 40% இன்னொரு தவணை 35 சதவீதம் என்ற அளவுக்கு மொத்தத்தில், வழக்கமாக வாங்குவதை ஒப்பிட்டால் 75% அளவுக்குத்தான் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு புதிதாக சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது. கடந்த வருடம் பிறப்பித்த உத்தரவை இப்போது பின்பற்ற முடியாது என்று பல பள்ளிகள் தெரிவித்ததன் காரணமாக புதிதாக சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
சில பள்ளி நிர்வாகங்கள் தங்களுக்கும் கஷ்டம் இருப்பதாகவும், எனவே மாதா மாதம் 25 சதவீதம் என்ற வகையில் பெற்றோர்களிடம் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். இருப்பினும் தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு 75 சதவீதத்துக்கு மேல் கட்டணம் வசூலிக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.
அதையும் தாண்டி கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பள்ளி பற்றியாவது, எங்களுக்கு பெற்றோரிடமிருந்து புகார் வந்தால், அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கண்டிக்கிறோம். அதையும் மீறி அவர்கள் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும் என்று நினைத்து செயல்பட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை பாயும்.
டெட் தேர்வு நடைமுறை வராமல் இருந்திருந்தால் வெயிட்டேஜ் முறை படி ஆசிரியர் தேர்வு எளிதாக நடைபெற்றிருக்கும். இப்போது இந்த புதிய தேர்வு முறை நடைமுறைக்கு வந்திருக்கிறது. எனவே ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது. இவை அனைத்தும் சீர் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் முன்வைத்துள்ளோம். நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நம்புகிறோம்.
ஒரு ஆசிரியரை பணிக்கு சேர்க்க வேண்டுமென்றால் இந்த வகையில்தான் பணி கிடைக்க வேண்டும் என்ற ஒரே நெறிமுறையை கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு ஆசிரியர் தேர்வு நடத்தப்படும். டிஎன்பிஎஸ்சி மூலம் ஆசிரியர் தேர்வு நடத்தும் திட்டம் அரசிடம் இல்லை.
தமிழ்நாட்டில் 9, 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. லாக்டவுன் பிறப்பிக்கப்படும் முன்பாக மருத்துவ வல்லுனர்கள் உடன் முதல்வர் ஆலோசனை நடத்துவது வழக்கம்.
பள்ளிகளை திறக்க வேண்டும் என்று முடிவு செய்தால் அதைவிட கூடுதலாக, விரிவாக, முதல்வர் ஆலோசனை நடத்துவார். அந்த ஆலோசனையில் மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களை கேட்டு அவர்கள் பள்ளிகளை திறக்க அனுமதித்தால் முதல்வர் அதற்கு சம்மதம் தெரிவிப்பார். அப்படி நிகழும் பட்சத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எந்த மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது பற்றிய அப்போது அறிவிப்போம். இவ்வாறு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.




No comments
Thank you for your comments