சிக்கிய முக்கிய ஃபைல்கள்... விசாரணை வளையத்தில் அதிமுகவின் 2 மாஜிக்கள்...?
சென்னை:
தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல், முறைகேடு புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் முக்கியமான சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமி நியமிக்கப்பட்டதில் இருந்தே அவர் முன்னாள் அமைச்சர்கள் குறித்தும் அதிமுக எம்எல்ஏக்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார். முந்தைய ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், இதற்காக கைமாறிய பணம் என்று பல விஷயங்களை தோண்டி எடுத்து விசாரித்து வருகிறார். ஸ்டிரிக்ட் அதிகாரி என்று பெயர் எடுத்த கந்தசாமியை விஜிலன்ஸ் டிஜிபியாக தமிழ்நாடு அரசு நியமித்ததே இதை மனதில் வைத்துதான் என்றும் கூறப்பட்டது
இது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கந்தசாமி டிஜிபி முதல்வர் ஸ்டாலினுடன் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தினார். இதில், முதல்வர் ஸ்டாலினிடம் முந்தைய ஆட்சியின் ஊழல்கள் குறித்த பட்டியலை கந்தசாமி அளித்ததாக கூறப்பட்டது. இதில் பல மாஜி அமைச்சர்களின் பெயர்களும் , அவர்களின் முறைகேடு குறித்த விவரங்களும் இடம் பெற்று இருந்ததாக கூறப்பட்டது.
இந்த சந்திப்பை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் விஜிலன்ஸ் அமைப்பு தமிழ்நாடு முழுக்க கைது நடவடிக்கைகளில் இறங்கும் என்றும் செய்திகள் வந்தன. ஆகஸ்ட் மாதத்தை குறி வைத்து அதிகாரிகள் காய் நகர்த்தி வருகிறார்கள், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக கைதுகள் அரங்கேறலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில்தான் தற்போது அதிமுகவின் 2 மாஜி அமைச்சர்கள் குறித்த முக்கிய ஆவணங்களை விஜிலன்ஸ் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு முன்னாள் அமைச்சர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் முறைகேடான முதலீட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். 10க்கு மேற்பட்ட இடங்களில், நிறுவனங்களில் இரண்டு மாஜிக்களும் முறைகேடாக முதலீடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.
அரசு பணத்தை தங்களின் சொந்த முதலீட்டிற்கு இவர்கள் பயன்படுத்தியதாகவும், அதில் பல கோடி லாபம் பார்த்ததாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறதாம். இது தொடர்பான பைல்களைத்தான் தற்போது விஜிலன்ஸ் கைப்பற்றியுள்ளதாம். இதனால் அந்த இரண்டு மாஜி அமைச்சர்களும் தற்போது விசாரணை வளையத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்கவே முந்தைய ஆட்சியில் பல்வேறு இடங்களில் செய்யப்பட்ட முறைகேடுகள் குறித்து விசாரணையில் விஜிலன்ஸ் குதித்துள்ளதாம். இவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறதாம். தற்போது முதல் கட்ட விசாரணைகள் நடக்கின்றன, விரைவில் இந்த புகார்களில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் விஜிலன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


No comments
Thank you for your comments