Breaking News

தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகள் – முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை

தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூர்வாரும் பணிகள், கல்லணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றை முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (11-6-2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

 முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (11.6.2021) தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில், நீர்வளத் துறை சார்பில் நீர் வள அமைப்புகள் விரிவாக்கம், புதுப்பித்தல், புனரமைத்தல் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 1036 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மேலும், நீர்வளத் துறை சார்பில் காவேரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன வசதிக்காக திறந்துவிடப்படும் தண்ணீர் விரயமாகாமல் கடைமடை வரை தடையின்றி சென்று சேரும் வகையில், டெல்டா பாசனப் பகுதிகளில் நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து நிறைவேற்ற தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

 இதன்படி, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, நீர்வளத் துறையின் சார்பில், திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில், ரூ.65.10 கோடி திட்ட மதிப்பில் 4061.44 கிலோ மீட்டர் தூரத்திற்கு 647 பணிகள் நடைபெற்று வருகின்றன. குறித்த காலத்தில், தரமான முறையில் பணிகளை முடிக்க ஏதுவாக, 9 மாவட்டங்களுக்கும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

மேற்படி பணிகள் தொடர்பாக உழவர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அக்குழுக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு, வெளிப்படைத் தன்மையுடன் பணிகள் நடைபெறுவதை  தெரிவிக்கும் வகையில் அனைத்து தகவல்களும் ஆவணப்படுத்தப்பட்டு அறிவிப்பு பலகைகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான பணிகளில்  ஈடுபட்டுவருகின்றனர்.  இதற்காக விவசாயிகளுக்கு உதவும் வகையில் விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் ஆகியவை போதுமான அளவிற்கு இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் மூலமாக டெல்டா மாவட்டங்களில் நீர்வளம் மேம்படும். இவ்வாண்டு நிர்ணயிக்கப்பட்ட சாகுபடி இலக்கைத் தாண்டி உணவு உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவேரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யும் பொருட்டு  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.

தஞ்சாவூரில் ஆய்வு

முதலாவதாக, தஞ்சாவூர் வட்டம், வல்லம் வடக்கு கிராமத்தில் 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதலை முத்துவாரி வடிகாலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும், 

தஞ்சாவூர் வட்டம், பள்ளியக்ரஹாரம் கிராமத்தில் 17 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெண்ணாற்றில் மண்திட்டுக்களை சமன்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

திருச்சியில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கொடியாலம் கிராமத்தில், 29.70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புலிவலம் மணற்போக்கி வடிகால் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும்  முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வுகளின்போது,  நீர்வளத் துறை அமைச்சர்  துரைமுருகன்,  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு,  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்,  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், சிறப்பு தூர்வாரும் பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர்  பிரதீப் யாதவ், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்தராவ், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சு. சிவராசு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

இதுகுறித்து முதலமைச்சர் தனது முகநூல், டிவிட்டர் தளத்தில் பதிவிட்டதாவது,

டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.

தமிழ்நாட்டின் நிகர பயிரிடு பரப்பை 75%-ஆக உயர்த்துதல் என்பது தேர்தலுக்கு முன்பாக நான் அளித்த 7 உறுதிமொழிகளில் ஒன்று. 

மகசூல் பெருக்கம்; மகிழும் விவசாயி என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது!

என்று பதிவிட்டு நேரில் பார்வையிட்ட வீடியோவை பதிவேற்றி உள்ளார்.

No comments

Thank you for your comments