தமிழகத்தின் 30-வது டி.ஜி.பியாக சைலேந்திரபாபு பதவியேற்பு..!
சென்னை:
தமிழகத்தின் 30-வது டி.ஜி.பி.யாக இன்று சைலேந்திரபாபு பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, திரிபாதி விடைபெற்றார். தமிழகக் காவல்துறையின் டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திர பாபு, பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனக் காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருப்பவர் திரிபாதி. அவர் இன்று ஓய்வு பெறுகிறார். அதையொட்டி தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக டாக்டர் சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு நேற்று பிறப்பித்தது.
முக்கிய செய்தி: உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு?
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனத்திலும் சரி, ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனத்திலும் சரி தலைசிறந்த அதிகாரிகளையே தேர்வு செய்து பணி அமர்த்தி உள்ளார்.
அந்த வகையில், திறமை மிக்க சைலேந்திரபாபுவை தமிழக காவல்துறையில் உயர்ந்த பதவியான டி.ஜி.பி. பதவியில் அமர்த்தி அவர் அழகு பார்த்துள்ளார். அவரது பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
சைலேந்திரபாபு பன்முக திறமை கொண்டவர், தலைசிறந்த தொழில் முறையிலான அதிகாரி ஆவார். சட்டம்-ஒழுங்கை கையாள்வதிலும் சரி, ரவுடிகள் ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, நிர்வாகம் மற்றும் ஆளுமை திறமையிலும் சரி, போலீஸ், பொதுமக்கள் நலத்தை பேணுவதிலும் சரி அவருக்கு, நிகர் அவரே. நல்ல பேச்சாளர். இன்றைய இளைஞர்களின் வழிகாட்டி. போதிய அதிகாரம் இல்லாத பதவியில் அவர் நியமிக்கப்பட்டபோதும், அவர் துவண்டு போகாமல் அதில் கூட சாதித்து காட்டி உள்ளார்.
2019 மார்ச் முதல் ரயில்வே காவல்துறை டிஜிபியாகப் பணியாற்றி வந்த சைலேந்திர பாபு, தமிழகத்தின் 30-வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இன்று பதவியேற்றுக்கொண்டார். முந்தைய டிஜிபி திரிபாதி அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 30 நாட்களுக்குள் தீர்வு
பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்ட காவல் துறை தொடர்பான மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு முதலமைச்சருக்கு அறிக்கை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மரபுப்படி விடைப்பெற்றார் டி.ஜி.பி ஜே.கே.திரிபாதி
இரண்டு ஆண்டுகளாக டிஜிபியாகப் பணியாற்றிய திரிபாதி ஓய்வு பெற்றதையடுத்து அவரையும், அவர் மனைவியையும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமரவைத்து தேர் போல் வடம் பிடித்து, நுழைவாயில் வரை இழுத்துச் சென்று டிஜிபி அலுவலகத்திலிருந்து வழியனுப்பினர் காவல்துறை அதிகாரிகள்... மரபுப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது இசைக்குழுவின் இசை முழங்கக் காவல்துறையினர் அணிவகுத்து நின்று வழியனுப்பினர்.
இன்று மாலை 4 மணி அளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் திரிபாதிக்கு பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.


No comments
Thank you for your comments