மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற உத்தரவு -சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை:
தடுப்பூசி கொள்முதலுக்கு டெண்டர் கோருவது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. கொரோனா மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கூறிய நீதிமன்றம், மோசமான நிலை வராமல் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்றவேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்துபவர்கள் மருத்துவமனைகளுக்கு வர அஞ்சுவதால், தடுப்பூசி செலுத்தும் மையங்களை வேறு இடங்களில் அமைக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக சிறப்பு வசதி செய்ய வேண்டும் என்றும் கூறியது.
தடுப்பூசி கொள்முதலுக்கு டெண்டர் கோருவது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 519 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டிஆர்டிஓ மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்த கோரி பிஎம் கேர்ஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
No comments
Thank you for your comments