Breaking News

சட்டசபை சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு

சென்னை:

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு அப்பாவு, துணை சபாநாயகர் பதவிக்கு பிச்சாண்டி ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


மாண்புமிகு  தமிழ்நாடு  முதலமைச்சர்  திரு.  மு.க.  ஸ்டாலின்  அவர்கள்  இன்று (11-5-2021) கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்தார். அவரை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்றப் பேரவைச் செயலாளர் வரவேற்றனர்.

பின்னர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலைவாணர் அரங்கிலுள்ள பேரவைத்  தலைவர் அறைக்குச் சென்று, தற்காலிகப் பேரவைத் தலைவர் திரு. கு. பிச்சாண்டி அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு அவை  முன்னவர் திரு.துரைமுருகன் மற்றும் அமைச்சர் பெருமக்கள் உடனிருந்தனர். 


பின்னர், மாண்புமிகு முதல்வர் அவர்கள், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் திரு. கி. சீனிவாசன் அவர்களிடம், பேரவைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் திரு. மு. அப்பாவு மற்றும் பேரவைத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் திரு. கு. பிச்சாண்டி  ஆகியோரது வேட்பு மனுக்களை முன்மொழிந்தார்.  இந்த வேட்பு மனுக்களை மாண்புமிகு அவை முன்னவர் திரு. துரைமுருகன் அவர்கள் வழிமொழிந்தார்.

பிறகு, தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை கலைவாணர் அரங்கில் கூடியது. தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி சட்டசபையை நடத்தினார்.

சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வெற்றிச் சான்றிதழ்களுடன் வந்திருந்தனர். முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அமைச்சர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதன்பிறகு எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் உறுதிமொழி ஏற்றனர். அகர வரிசைப்படி புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து தமிழக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு அப்பாவு, துணை சபாநாயகர் பதவிக்கு பிச்சாண்டி ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு 1996-ம் ஆண்டு தேர்தலில் த.மா.கா. சார்பில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக சிறப்பாக பணியாற்றியவர். 

2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

2006-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 

2011-ம் ஆண்டு இந்த தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. 

2016-ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு மீண்டும் போட்டியிட்டார். அந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இதையொட்டி அந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை தீர்ப்பு வரவில்லை.

இந்த நிலையில் தற்போது சட்டசபை பொதுத்தேர்தலில் அதே ராதாபுரம் தொகுதியில் அப்பாவு போட்டியிட்டார். இதில் அவர் அமோகமாக வெற்றி பெற்றார்.

துணை சபாநாயகர் பிச்சாண்டி

சட்டசபையில் துணை சபாநாயகர் பிச்சாண்டி தி.மு.க. ஆட்சியில் ஏற்கனவே அமைச்சராக இருந்தவர். சட்டசபைக்கு 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.


 


No comments

Thank you for your comments