Breaking News

எடப்பாடியாரிடம் குவியும் புகார்கள்.. !

சென்னை: 

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்காத நிர்வாகிகள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் மனுக்கள் குவிந்து வருகின்றன.


தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதன் முடிவுக்காக மே 2-ம் தேதி வரை அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் எப்போதும் இல்லாத வகையில் இந்தமுறை அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகள் பல இடங்களில் நடைபெற்றிருக்கும் விவகாரம் இப்போது எடப்பாடியார் கவனத்திற்கு வரத் தொடங்கியுள்ளது. இதனால் கட்சிக்கு துரோகம் செய்பவர்களுக்கு இங்கு இடமில்லை எனக் கூறி ஆக்‌ஷனை தீவிரப்படுத்த தொடங்கினார் எடப்பாடியார்...  அந்த வகையில் சிட்டிங் எம்.எல்.ஏ. என்று கருதாமல் பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம் உட்பட அவருடன் சேர்த்து 6 பேரை கட்சியில் இருந்து விலக்கியது அதிமுக தலைமை. இந்நிலையில் தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் இருந்து அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயலாற்றியவர்கள் என பெரிய புகார் பட்டியல் ஒன்று முதலமைச்சர் இ.பி.எஸ்.க்கு சென்றுள்ளது.

பெரும்பாலான புகார்கள் என்னவென்றால், தேர்தல் செலவுக்கான பணத்தை முறையாக செலவிடவில்லை என்பதும் சீட் கிடைக்காதவர்கள் எதிர்தரப்பினருடன் கரம்கோர்த்தார்கள் என்பதும் தான்.  இதன் மீதான நடவடிக்கை பற்றி ஒருங்கிணைப்பாளர் என்றதன் அடிப்படையில் ஓ.பி.எஸ். தரப்பில் இருந்து எந்த பதிலும் இ.பி.எஸ்.க்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், புகார்களின் உண்மை தன்மையை ஆராய்வது பற்றியும் முதலமைச்சர் தரப்பு ஆலோசித்திருக்கிறது.  இதனால் மே 2-ம் தேதி வரை புகார் கடிதங்கள் மீதான ஆக்‌ஷனை நிறுத்தி வைப்பது என முடிவெடுத்த இ.பி.எஸ். தேர்தல் முடிவு-தொகுதிகளின் நிலவரம் பற்றிய ஆலோசனையில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

No comments

Thank you for your comments