வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும்... ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை:
கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிடக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் அதிமுக வேட்பாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் என நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
“அரசியல் கட்சிகளும் இஷ்டம்போல் பிரசாரம் செய்தது கொரோனா பரவலுக்கு காரணம். நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களா? கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பிற்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும்” என நீதிபதிகள் எச்சரித்தனர்.
வாக்கு எண்ணிக்கையின்போது கரூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உரிய பாதுகாப்பு தரப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தலைமைச் செயலாளர் மற்றும் இயக்குனரிடம் உரிய ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி நீதிபதிகள் கூறினர்.
No comments
Thank you for your comments