மேற்குவங்கம் 6ம் கட்ட சட்டமன்ற தேர்தலில் 79.11% வாக்குகள் பதிவு
புதுடெல்லி:
மேற்குவங்கத்தின் 4 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளில் இன்று நடைபெற்ற 6ம் கட்ட சட்டமன்ற தேர்தலில் 79.11% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடந்த வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்றது. ஆங்காங்கே நடந்த சில வன்முறை சம்பவங்கள் தவிர்த்து பெரியளவில் பிரச்சனை ஏற்படவில்லை என்று கொல்கத்தாவில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேர்தல் நடைபெற்ற 4 மாவட்டங்களில் அதிகப்பட்சமாக நாடியாவில் 82.70 சதவீதமும் புர்பா பர்தாமனில் 82.13 சதவீதம் வாக்குகள் பதிவானது. அடுத்தப்படியாக உத்தர் தினாஜ்பூரில் 77.99 சதவீத வாக்குகளும் வடக்கு 24 பர்கானாஸில் 76.23 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.
பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றாலும் வடக்கு 24 பார்கானாஸ் மாவட்டத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே சில இடங்களில் மோதல் ஏற்பட்டன. பாதுகாப்பு படையினர் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டன. அவை உடனடியாக மாற்றப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக 7ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும் 8ம் கட்டம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதியும் நடைபெறும். மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

No comments
Thank you for your comments