லத்தேரியில் பட்டாசு குடோனில் தீவிபத்து- குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பஸ் நிலையம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பஸ் நிலையம் அருகே மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இன்று காலை மோகன் பட்டாசு கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தார். அப்போது சிலர் பட்டாசு வாங்க வந்தனர். குடோனில் இருந்த பட்டாசுகளை எடுத்து வந்து வாடிக்கையாளர்களுக்கு மோகன் காண்பித்தார். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் மளமளவென்று வெடித்து தீ, பட்டாசு குடோன் முழுவதும் பரவியது.
பட்டாசு குடோனில் மோகனின் 2 பேரப்பிள்ளைகள் இருந்ததால் அவர்களை காப்பாற்ற மோகன் அங்கு ஓடினார். அதற்குள் குடோன் முழுவதும் தீ பரவி பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால் குடோனில் சிக்கியவர்கள் வெளியே வராமல் உள்ளே மாட்டிக் கொண்டனர்.
காட்பாடி மற்றும் குடியாத்தம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அவர்களால் பட்டாசு குடோன் அருகே நெருங்க முடியவில்லை. இதையடுத்து அருகில் உள்ள மாடிகள் மீது ஏறி நின்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ ஓரளவுக்கு அணைந்த பின்னர் தீயணைப்பு துறையினர் உள்ளே புகுந்து பார்த்தனர். அப்போது அங்கு மோகன் மற்றும் 2 பேரப்பிள்ளைகள் தனுஷ், தேஜஸ் தீயில் கருகி பரிதாபமாக இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏராளமானோர் தீ விபத்தை காண அந்த பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லத்தேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்தவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து உடல்களை மீட்டுக் கூறாய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments
Thank you for your comments