Breaking News

கவர்சியான வாக்குறுதிகளை அள்ளி வீசிய அதிமுக- அம்மா வாஷிங் மெஷின், கல்விக் கடன் ரத்து, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை...

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.



தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 178 தொகுதிகளில் களமிறங்குகிறது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் அறிக்கையை வெளியிடும் பணி தொடங்கியது.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மக்களின் மனம் நிறைவுபெறும் விதத்தில் அறிவிப்புகள் இடம்பெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். 

மேலும், மகளிர் நலனுக்காக குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும், சமூகத்தில் பொருளாதார சமநிலையை ஏற்படுத்தும் விதமாக குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.1,500 குடும்பத்தலைவியிடம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்புகளால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்பட்டது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக அனைத்து குடும்பங்களுக்கும் அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும், விலையில்லா கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும். மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், ரேசன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை, அம்மா இல்லம் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

அதிமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு:

அங்கன்வாடி குழந்தைகளுக்கு 200மி.லி. பால் வழங்கப்படும்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 வழங்கப்படும்.

 வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்.

அனைவருக்கும் வீடு வழங்கும் வகையில் அம்மா இல்லம் திட்டம்.

மகளிர் நலம் காக்கும் குலவிளக்குத் திட்டம்.

மகளிருக்கு பேருந்து சலுகை.

ரேஷன் பொருள்கள் வீடு தேடிவந்து கொடுக்கப்படும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டிற்கு 6 சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும்.

பெண்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்குடன் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு அம்மா வாஷிங்மிஷின் வழங்கப்படும்.

 கல்லூரி மாணாக்கர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி இலவச டேட்டா.

முதியோருக்கான ஊதியத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 -ஆக உயர்வு.

மத்திய அரசு பணிக்கு மாநில அளவிலான தேர்வு நடத்தப்படும் 

தமிழ் மொழிப்பாடம் பள்ளிகளில் கட்டாயமாக்கப்படும்.

உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் கொண்டுவரப்படும்.

ஈழத்தமிழர்கள் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவர்.

ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மூலம் நிரந்தரதீர்வு.

காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு.

வேளாண் விளை பொருள்கள் லாபகரமான விற்பனைக்கு வழிகாட்டும் அமைப்பு உருவாக்கப்படும்.

பனைமரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும்.

ஒருங்கிணைந்த குளிர்சாதனக் கிடங்கு அமைக்கப்படும்.

நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்.

நம்மாழ்வார் பெயரில் வேளாண்மைப் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்.

மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும்.

100 நாள்கள் வேலை 150 நாள்களாக உயர்த்தப்படும்.

சாதிவாரி கணக்கெடுப்பின்படி அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீடு.

மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்.

நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு 50 சதவிகித பயணக் கட்டண சலுகை.

நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குத் தேவையான கடன் உதவி வழங்கப்படும்.

கோதாவரி - காவேரி இணைப்புத் திட்டத்தை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை.

அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.10,000 வட்டியில்லா கடன்

வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இளைஞர்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில் தொடங்க நிதியுதவித் திட்டம்.

9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டம்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை.

ரூ.25,000 மானியத்தில் எம்.ஜி.ஆர். பசுமை ஆட்டோ திட்டம்.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்கப்படும்.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.

திருநங்கைகளுக்கு சிறுதொழில் மானியம் ரூ.20,000-ல் இருந்துரூ.50,000 ஆக உயர்வு.

கிராமக் கோயில் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000-லிருந்து ரூ. 3,000 ஆக உயர்வு.














No comments

Thank you for your comments