நள்ளிரவில் நீண்டநேரம் நீடித்த பேச்சுவார்த்தை...! எடப்பாடியாரிடம் அமித்ஷா பேசியது என்ன..?
சென்னை, மார்ச் 1:
நள்ளிரவில் நீண்டநேரம் அமித்ஷா நடந்த பேச்சுவார்த்தை டீலிங் என்ன என்பது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது.
பாஜகவுடன் அதிமுகவுக்கு தொகுதி உடன்பாடு கடந்த 6 மாதமாகவே எட்டப்படவில்லை.. சீட் எவ்வளவு என்பதும் இழுபறியாகவே இருக்கிறது.. கூட்டணியில் இது தொடர்பான பிரச்சனை தொடர்ந்து இருந்து வருகிறது. இதுபோன்ற சூழலில்தான், அமித்ஷாவும், பிரதமரும் மாறி மாறி தமிழகம் வந்து சென்று கொண்டிருக்கிறார்கள்..
நேற்று கூட அதிமுக தலைமையிடம் அமித்ஷா பேசியதாக தெரிகிறது.. எடுத்த எடுப்பிலேயே 35 சீட் என்றுதான் ஆரம்பித்தாராம் அமித்ஷா.. அடுத்து 30 சீட் என்று பேச்சை தொடர்ந்துள்ளார்.. பாமகவுக்கு தந்ததுபோலவே தங்களுக்கும் சீட் அதிகமாக வேண்டும் என்பதுதான் பாஜக தலைமையின் டிமாண்ட்.. ஆனால், அந்த அளவுக்கு அதிமுகவில் தர வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.. வேண்டுமானால் 20 - முதல் 25 சீட் வரை வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 10 மணிக்கு ஹோட்டலுக்கு அமித்ஷா வந்துள்ளார்.. ஆனால், 1 மணிக்குதான் கிளம்பி டெல்லி சென்றுள்ளார்.. நள்ளிரவு வரை ஓபிஎஸ், எடப்பாடியாருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறுகிறார்கள்.. எத்தனையோ முறை சீட் ஒதுக்கீடு பற்றி பேசி இருக்கிறார்கள்.. அப்போதெல்லாம் இவ்வளவு நேரம் ஆனதில்லை.. வெறும் தொகுதி உடன்பாட்டை மட்டுமா இவ்வளவு நேரம் பேசியிருப்பார்கள் என்ற சந்தேகமும் எழுகிறது.
தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் குறித்த ரிப்போர்ட் ஒன்று ஏற்கனவே பாஜக தலைமைக்கு சென்றுள்ளது.. இந்த ரிப்போர்ட்டை கையில் வைத்து கொண்டுதான், பேச்சுவார்த்தைகளை அமித்ஷா நடத்தி வருகிறார்..
தென் மாவட்டங்களில் சசிகலாவால் அதிமுக ஓட்டு பிரியாது என்றால், தைரியமாக தென்மண்டலங்களிலேயே அதிமுக பெருவாரியான இடங்களில் நிற்கலாமே? தங்களுக்கு கொங்கு மண்டலத்தை ஒதுக்கி தந்து விடலாமே? என்ற ரீதியில்தான் பேச்சு நடந்து வருகிறது...
தமிழகத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி, தஞ்சை பகுதி, கொங்கு மண்டலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கான இடங்கள் ஓரளவு இருக்கின்றன.. ஆனால், இந்த பகுதிகளில் அதிமுகவுக்கும் சாதகமான களம் இருக்கிறது.. அதனால்தான், சீட் ஓரளவு ஒதுக்கினால்கூட, தொகுதிகளில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமித்ஷா அநேகமாக இது குறித்துதான் அதிமுக தலைமையிடம் பேசியிருப்பார் என்கிறார்கள்.
முன்னதாக மத்திய உள்துறை இணை அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி, இணைப்பொறுப்பாளரும் மத்திய இணை அமைச்சருமான வி.கே.சிங், பாஜ மேலிடபொறுப்பாளர் சி.டி.ரவி, பாஜ தலைவர் எல்.முருகன், பாஜ அமைப்பு பொது செயலாளர் கேசவவிநாயகம் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிப்.27ம் தேதி அன்று காலை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்... பேச்சுவார்த்தையின்போது அதிமுக தரப்பில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் இருந்தனர்.
பேச்சுவார்த்தையின் போது, ‘‘எங்களுக்கு 60 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்’’ என்று கூறி தொகுதிகளுக்கான பட்டியலையும் பாஜ தரப்பில் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவ்வளவு தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டாராம். 21 தொதிகள் வரை தரலாம் என அவர் கூறியதாக தெரிகிறது. அதற்கு குறைந்தபட்சம் 50 தொகுதிகளாவது ஒதுக்குங்கள் என்று பாஜ தரப்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது. அமமுகவுக்கு நாங்கள் 20 தொகுதிகள் வரை ஒதுக்குவதாக வாக்குறுதி கொடுத்துள்ளோம் என்றும் பாஜ தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ‘‘உங்களுக்கு மட்டும் கேளுங்கள். அமமுகவை கூட்டணியில் சேர்க்க வேண்டாம். நான் பிரதமர் மோடியிடம் இதை வலியுறுத்தினேன். அவரும் ஒப்புக் கொண்டார்’’என்று கறாராக கூறியுள்ளார்.இதனால், பேச்சுவார்த்தைக்கு வந்த பாஜ தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இறுதியாக 25 சீட்டுக்களை பெற சம்மதித்த பாஜ தலைவர்கள், அமித்ஷா, சசிகலாவுக்கு 20 தொகுதிகள் கொடுத்து எப்படியும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறார். இதனால் அவர் தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறி சென்று விட்டனர். அதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
தொடர்ந்து பாஜ குழுவினர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் பிப்.27ம் தேதி அன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேசினர். அவரும் எடப்பாடி கருத்தே எனது கருத்து என்று கூறிவிட்டார்.
இந்த நிலையில் விழுப்புரம், புதுச்சேரியில் நடைபெற்ற பாஜ விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்.27ம் தேதி இரவு சென்னை வந்திருந்தார். பிப்.28ம் தேதி காலையும் அவர் சென்னையில் தான் இருந்தார். அவரை, இபிஎஸ், ஓபிஎஸ்சிடம் தொகுதி பங்கீடு பேச்சு நடத்திய கிஷன் ரெட்டி, வி.கே.சிங், சி.டி.ரவி, பாஜ தலைவர் எல்.முருகன், கேசவ விநாயகம் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேசினர்.
அப்போது, சசிகலாவை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி, ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவிப்பது, 21 தொகுதிகள் தான் தர முடியும் என்று கூறியது குறித்து அமித்ஷாவுடன் பாஜ தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அனைத்தையும் கேட்டு கொண்ட அமித்ஷா, ‘‘அதிமுக ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடந்து இருக்கிறது. எவ்வளவு ஐடி, அமலாக்கத்துறை ரெய்டு நடந்துள்ளது. இதில் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை சிக்கி உள்ளனர். இவர்கள் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.
இருந்தும், இவர்களை நாம் தான் காப்பாற்றி உள்ளோம். ஆனாலும், சசிகலா விஷயத்தில் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது சரியில்லை. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இதனால், சசிகலாவை கூட்டணியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இல்லையென்றால் ஓட்டுகள் சிதறும். சசிகலாவை நம்ம கூட்டணியில் சேர்ப்பது தான் நல்லது’ ’என கூறி உள்ளார். இது குறித்து பாஜக தலைவர்களிடம் சில ஆலோசனைகளை கூறி அனுப்பி உள்ளார்.
இந்நிலையில், சசிகலாவை கூட்டணியில் இணைக்கக்கூடாது என்று உறுதியாக உள்ள எடப்பாடி, ‘‘சசிகலாவை நீங்களும் சேர்க்க வேண்டாம். நாங்களும் சேர்க்க விரும்பவில்லை. உங்களுக்கு வேண்டும் என்றால் 30 தொகுதிகள் கூட தருகிறோம். நீங்கள் வேண்டுமென்றால் அவர்களுக்கு தொகுதிகள் பிரித்துக் கொடுங்கள்.
ஆனால், அவர்கள் பாஜ சார்பில் உங்கள் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். குக்கர் சின்னத்தில் போட்டியிடக்கூடாது’’ என்று தனது இறுதியான முடிவை பாஜக தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பாஜ தலைவர்கள், அமித்ஷா காதுக்கு கொண்டு சென்றுள்ளனர். சசிகலாவை சேர்க்க வேண்டாம் என எடப்பாடி அடம் பிடிப்பதால் அமித்ஷா கடும் அதிருப்தியில் உள்ளார். எடப்பாடி வைத்துள்ள நிபந்தனைக்கு அமித்ஷா இறங்கி வருவாரா என்பது சந்தேகம் தான்.
இதெல்லாம் ஒரு யூகத்தின் அடிப்படையில் கசிந்து வரும் தகவல் என்றாலும், அடுத்தடுத்த நாட்களில் அதற்கான விடை வெட்ட வெளிச்சமாகும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை...



No comments
Thank you for your comments