Breaking News

அதிமுகவுடன் அமமுக கூட்டணி வைக்குமா?.... சிரித்தபடியே சூசகமாக பதிலளித்த சி.டி.ரவி

சென்னை, மார்ச் 4-

அதிமுகவுடன் அமமுக கூட்டணி வைக்குமா? அப்படி கூட்டணி வைத்தால் அதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? என்று பல விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் நடந்த வண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட நேரத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி அளித்த பேட்டி இந்த விவாதத்தை பெரிதாக்கி இருக்கிறது. 



2021 சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க அதிமுக, அமமுக இடையே என்ன நடக்கும் என்று கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இரண்டு கட்சிகளும் கூட்டணி வைக்குமா? ஒன்று சேருமா? இல்லை தனியாக தேர்தலை சந்திக்குமா? என்று கேள்விகள் எழுந்துள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் சசிகலா தொடர்ந்து சைலன்ட் மோடில் இருப்பது ஏன்? புயலுக்கு முன்பான அமைதியா இது? என்று கேள்விகள் எழுந்துள்ளன. 



சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையிலும் கூட அமமுகவுடன் இணையும் எண்ணம் அதிமுகவிற்கு இல்லை என்கிறார்கள். இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி ஒவ்வொரு நாளும் அதிமுக தலைவர்கள் அமமுகவை தாக்கி பேசி வருகிறார்கள். அமமுக தயவு இல்லாமல் வெற்றிபெற்றுவிட முடியும் என்று அதிமுக தலைவர்கள் நினைக்கிறார்கள். அதிமுக தனிப்பெரும் கட்சி. அமமுக தயவு எல்லாம் தேவை இல்லை. சட்டசபை இடைத்தேர்தலில் வென்றது போல திமுகவிற்கு எதிராக அதிமுக தனியாக வெல்லும். அமமுக உதவி எங்களுக்கு தேவை இல்லை என்று அதிமுக கருதுகிறது. அதிலும் முதல்வர் பழனிசாமிக்கு இப்போது ஆதரவு பெருகி இருப்பதால் அதிமுக கூடுதல் நம்பிக்கையுடன் இருக்கிறது.

ஆனால் பாஜக இந்த கருத்தில் இருந்து மாறுபட்டு உள்ளது என்கிறார்கள். அமமுக வந்தால் நமக்குத்தான் நல்லது. அதிமுக வாக்கு பிரியாது. திமுகவிற்கு இடமே கொடுக்க கூடாது, லோக்சபா தேர்தல் போல நடந்துவிட கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. இதனால் அமமுக வந்தால் ஏற்றுக்கொள்ளலாம் என்ற நிலையில்தான் பாஜக இருக்கிறது.சசிகலா வந்து பேசினால், கூட்டு சேர்வது குறித்து முடிவு எடுக்கலாம் என்ற நிலையில் பாஜக இருக்கிறது. 

ஆனால் அதிமுகவை கட்டாயப்படுத்தும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை என்றும் கூறுகிறார்கள். அதிமுக வேண்டாம் என்று கூறினால், எங்களுக்கும் சசிகலா வேண்டாம் என்ற முடிவில்தான் பாஜக இருக்கிறதாம்.

இரண்டு கட்சியும் சேர்ந்து போட்டியிட்டால் ஓகே.. இல்லையென்றாலும் பிரச்சனை இல்லை என்ற மோடில் பாஜக இருக்கிறது. கூட்டணி குறித்து முடிவு எடுப்பதில் அதிமுகவிற்கு பாஜக தன்னிச்சையாக முடிவெடிக்க கொடுத்துவிட்டது என்று கூறுகிறினார்கள். 

இதுகுறித்து பேட்டி அளித்த தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவியும் இதை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார். தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி புதன்கிழமை (03&03&2021) அன்று சென்னையில் அளித்த பேட்டியில் அதிமுக அமமுக கூட்டணி தொடர்பாக அதிமுகவே முடிவெடுக்கும். அதிமுகதான் எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி. இதனால் அவர்கள்தான் அமமுக கூட்டணி குறித்து முடிவு எடுப்பார்கள். சசிகலா, தினகரனின் பலம், பலவீனத்தை அதிமுக அறியும், என்று சிரித்தபடி கூறினார்

அமமுக வேண்டாம் என்றோ, வேண்டும் என்றோ சிடி ரவி எங்கும் கூறவில்லை. சிரித்தபடியே சிடி ரவி இந்த கேள்விக்கு பதில் அளித்தார். வெளிப்படையாக அதிமுக முடிவு எடுக்கட்டும் என்று விட்டுவிட்டார். இதன் மூலம் அமமுக வருவதில் பாஜகவிற்கு எந்த சிக்கலும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால் அதிமுக இன்னும் அமமுகவை சேர்த்துக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை என்கிறார்கள்.

அமமுகவை மையமாக வைத்து இப்படி பல விவாதங்கள் நடக்கின்றனர். தன்னை உடன் சேர்த்து கொள்ளாமல் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி எதிர்த்து வந்தால் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும் ஏற்படும் என்பதில் சசிகலா உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்ட தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியான அதிமுக, கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் சீட் தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. 

No comments

Thank you for your comments