Breaking News

அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும்....! எல்.கே.சுதீஷ் சுளீர் பேட்டி

சென்னை, மார்ச் 9:

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால், இன்று எங்கள் அனைவருக்கும் தீபாவளி என்று எல்.கே. சுதீஷ் கூறினார்.



சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனையை தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணி உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் எல்.கே. சுதீஷ் கூறியதாவது:

‘‘அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியதால், இன்று எங்கள் அனைவருக்கும் தீபாவளி. அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும். அ.தி.மு.க.வை வீழ்த்த தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தொண்டர்கள் பணியாற்றுவார்கள். 

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பா.ம.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது குறித்து தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி கூறியதாவது:-

நாங்கள் கூட்டணியில் 23 தொகுதிகள் கேட்டு வற்புறுத்தி வந்தோம். ஆனால் அ.தி.மு.க. அதை தர மறுத்துவிட்டது. மேலும் 2011 தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கி தரவேண்டும் என்றும் கேட்டோம். அதற்கும் அ.தி.மு.க. சம்மதிக்கவில்லை. எனவேதான் அந்த கூட்டணியில் இருந்து விலகுகிறோம். தனித்து போட்டியிடுவது தொடர்பாக நாளை மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு பார்த்தசாரதி கூறினார்.

No comments

Thank you for your comments