Breaking News

விருப்ப மனு அளிக்கும் தேதியில் மாற்றம.....அதிமுக தலைமை அறிவிப்பு...

சென்னை, மார்ச் 1-

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவை அளிக்க  மார்ச் 5ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் 3ம் தேதி கடைசி நாள் என  அதிமுக தலைமை கழகம் இன்று (01/03/2021) அறிவித்துள்ளது.



தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26ம் தேதி அறிவித்தது.

ஆளுங்கட்சியான  அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறவர்கள்  பிப்ரவரி 24ம் தேதி முதல் மார்ச் 5-ம் தேதி வரை சென்னையில் உள்ள  கட்சி தலைமை அலுவலகத்தில் ரூபாய் 15,000 செலுத்தி விருப்ப மனு பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட அதிமுகவினர் பலரும் விருப்ப மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில்,  அதிமுக சார்பில் போட்டியிடுவோர் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவை தாக்கல் செய்வற்கான நாள் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை  ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை  பொதுத்தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தலைமைக் கழகத்தில் கடந்த 24.02.2021 முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகளுக்கு விருப்ப மனு விண்ணப்பப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

06.04.2021 அன்று சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கால அட்டவணை வெளியிட்டுள்ள நிலையில், கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகளுக்கு 03.03.2021 புதன்கிழமை வரை மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும் என்றும்; அவ்வாறு வழங்கப்படும் அனைத்து விண்ணப்பப் படிவங்களையும் பூர்த்தி செய்து அன்றைய தினமே மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.  இக்காலக்கெடு எக்காரணத்தைக் கொண்டும் நீட்டிக்கப்படமாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு, அதிமுக தலைமை கழக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



No comments

Thank you for your comments