Breaking News

மன் கி பாத் உரையில் தனது ஆதங்கத்தை பகிரங்கமாக வெளிபடுத்திய பிரதமர் மோடி..

 புதுடெல்லி :

கோடை காலத்திற்காக மழைநீரை சேமிக்க வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வாருவதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும் என பிரதமர் மோடி இன்றைய மனதின் குரல் (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியில் உரையாடினார்.

மேலும் அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பிரதமர் ....



பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றது முதல், மனதின் குரல் (மன் கி பாத்) என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11:00 மணிக்கு இந்திய நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

74வது முறையாக ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு  பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள், மழை நீர் சேமிப்பின் முக்கியத்துவம், தேசிய அறிவியல் தினம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார். 

அப்போது பேசிய அவர்,

தேசிய அறிவியல் தினம்

இன்று தேசிய அறிவியல் தினம். விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் எழுதிய 'ராமன் விளைவு' கண்டுபிடிப்பிற்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நமது இளைஞர்கள் இந்திய விஞ்ஞானிகளைப் பற்றி நிறையப் படித்து இந்திய அறிவியலின் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 

சுயசார்பு இந்தியாவுக்கு அறிவியலின் பங்கு மிகவும் அதிகம் தேவை  சுயசார்பு இந்தியா திட்டம் என்பது வெறும் அரசின் கொள்கை மட்டுமல்ல, அது ஒரு தேசிய உணர்வு. என்றார் மோடி.

தமிழை கற்க மிகவும் ஆர்வம்

பல ஆண்டுகளாக பிரதமராகவும், முதலமைச்சராகவும் இருந்த தங்களுக்கு எதையாவது இழந்து விட்டோம் என்ற எண்ணம் உள்ளதா என நேயர் ஒருவர் மன் கி பாத் உரையின் போது மோடியிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மோடி, தமிழ் மொழியின் பெருமை குறித்து என்னிடம் பலரும் தெரிவித்தனர். உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, இலக்கியங்கள் உன்னதமானவை தமிழ்.  

அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று.

நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிகிறது. இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நமது கனவுகளை நனவாக்க நாம் பிறரை சார்ந்து இருக்க வேண்டியது இல்லை.

மாணவர்கள் அச்சம் கொள்ளகூடாது

மாணவர்கள் தேர்வு குறித்து அச்சம் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் செல்ல வேண்டும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கவலையடைந்தவர்களாக இருக்க கூடாது, வீரமானவர்களாக இருக்க வேண்டும். மேலும் தேர்வுக்கான விவாதம் குறித்த தமது நிகழ்ச்சிக்கு யோசனைகளை வழங்குமாறு ஆசிரியர்களையும், பெற்றொரையும் கேட்டுக் கொண்டார்.

கும்பமேளா

நதிக்கரைகளில் பல நாகரீகங்கள் மேம்பட்டிருக்கின்றன. நமது கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதால் இது பற்றி விரிவாக நம்மிடத்திலே காணக் கிடைக்கின்றது. இந்த ஆண்டு ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற உள்ளது.

மழை நீர் சேகரிப்பு

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “கோடை காலத்திற்காக நாம் மழைநீரை சேமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வாருவதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும். இயற்கை அளிக்கும் கொடையான தண்ணீரை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது. நீரானது நமக்கு இயற்கை அளித்த பரிசு. 

நாட்டின் அநேக பகுதிகளில் மே, ஜூன் மாதங்களில் மழைக் காலம் தொடங்கி விடுகிறது. நாம் இப்போதிலிருந்தே அக்கம்பக்கத்தில் இருக்கும் நீர்நிலைகளை  தூய்மைப்படுத்தி மழைநீரை சேமிக்க வேண்டும்.

உலக தண்ணீர் தினம்

மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மழை நீர் சேகரிப்பை உத்வேகப்படுத்தும் நோக்கில் பிரச்சாரத் திட்டம் ஒன்றை ஜல்சக்தி அமைச்சகம் விரைவில் அறிவிக்கும்.

ஏரிகள், குளங்கள் பராமரிப்பு

ஒரு காலத்தில் கிராமங்களில் ஏரிகள், குளங்கள் ஆகியவற்றின் பராமரிப்பை அனைவரும் இணைந்தே செய்து வந்தார்கள். நீரை பாதுகாக்கும் பொருட்டு இப்போது ஒரு கூட்டு முயற்சி தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் நடந்து வருகிறது. அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக மூடப்பட்ட கிணறுகளை புதுப்பித்து வருகின்றனர்” என்றார். 

மதுரையை சேர்ந்த முருகேசனுக்கு பாராட்டு

வாழைக் கழிவிலிருந்து ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வருவதாக, மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிரான போரில், அஜாக்கிரதையுடன் இருக்க கூடாது” என்று பிரதமர் மோடி கூறினார்.



No comments

Thank you for your comments