Breaking News

பாஜக தொண்டர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் .. 6 பேர் காயம்

கொல்கத்தா : 

மேற்கு வங்காளத்தில் பாஜக தொண்டர்கள் மீது வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர்.



மேற்குவங்காளத்தின் 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு மார்ச் 27ம் தேதி துவங்கி ஏப்ரல் 29ம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி,  பாஜக மற்றும்  இடதுசாரிகள், காங்கிரஸ், இந்திய மதசார்பற்ற முன்னணி கட்சிகளின் கூட்டணிக்கும் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால் மேற்குவங்காளத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இதில் கட்சிகளுக்கு இடையேயான மோதல் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.  இந்நிலையில், மேற்குவங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பாஜக தொண்டர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள ராம்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை வழிமறித்த சிலர் அவர்கள் மீது கச்சா வெடிகுண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இந்த தாக்குதலில் பாஜக தொண்டர்கள் 6 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையில்  போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments