கல்வி, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டில் 40% ஆக உயர்வு...மு.க.ஸ்டாலின் வாக்குறுதி...
தூத்துக்குடி, மார்ச் 22:
திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும். கல்வி வேலைவாய்ப்பில் 30 சதவீதமாக இருக்கும் இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
தூத்துக்குடியில் இன்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
நீங்கள் தந்திருக்கும் இந்தச் சிறப்பான உற்சாகமான வரவேற்பிற்கு நன்றி. உங்களைத் தேடி நாடி ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். தேர்தலுக்காக வந்து போகிற ஸ்டாலின் நானல்ல. எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் எப்படிப்பட்ட நிலையிலும் உங்களோடு இருப்பவன்தான் இந்த ஸ்டாலின் என்ற உரிமையோடு உங்களிடம் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.
வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நீங்கள் எல்லாம் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
விடுதலைக்காக உயிரையே தியாகம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த இந்த மாவட்டத்திற்கு நான் வந்திருக்கிறேன். பேச்சால், எழுத்தால், எழுச்சியை ஊட்டிய வ.உ. சி பிறந்த மண்ணுக்கு நான் வந்திருக்கிறேன். சுதந்திர எழுச்சியை தன்னுடைய பாடலால் வெளிப்படுத்திக் காட்டிய உணர்ச்சியை ஊட்டிய பாரதியாருடைய மண்ணுக்கு நான் வந்திருக்கிறேன்.
இந்த மண்ணுக்காக குறிப்பாக இந்த தூத்துக்குடி மாவட்டத்திற்காக கலைஞர் அவர்கள் 5 முறை முதலமைச்சராக இருந்த போது நிறைவேற்றிய திட்டங்களில் சிலவற்றை மட்டும் உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மீனவர் நலனுக்காகவே மீன்வளத்துறையை உருவாக்கி கலைஞர் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததெல்லாம் வரலாறு, கடல்சார் பயிற்சிப்பள்ளி தொடங்கப்பட்டது.
நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதுதான் இந்த தூத்துக்குடி மாநகரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது என்பதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம், திரேஸ்புரம், வீரபாண்டியன் பட்டினம் கடற்கரை பகுதிகளில் தூண்டில் வளைவுகள், திருவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம். இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.
இதுபோல திட்டங்களை சொல்லி முதலமைச்சர் பழனிசாமி அவர்களால் மக்களிடத்தில் வாக்குக் கேட்க முடியுமா? அந்த யோக்கியதை அவருக்கு இருக்கிறதா? சாதனைகளை அவர்களால் சொல்ல முடியுமா? முடியாது.
வேதனைகளை தான் சொல்ல முடியும். அதுவும் எப்படிப்பட்ட வேதனைகள். இதே தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமை. அதை இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சு துடிக்கிறது. கண்களில் இரத்தக் கண்ணீர் வருகிறது. 13 பேரை காக்கை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளினார்கள்.
இவ்வாறு துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு வேலைவாய்ப்பு கொடுத்தார்கள். எப்படிப்பட்ட வேலை என்றால் படித்த பட்டதாரிகளாக இருப்பவர்களுக்கு தகுதியற்ற வேலைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
இப்போது நான் சொல்கிறேன். நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எனவே அவர்களுக்கு தகுதிக்குரிய வேலை நிச்சயமாக நம்முடைய ஆட்சியில் வழங்கப்படும் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
திமுக ஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னேற்றதுக்கான பல அற்புதனமான திட்டங்கள் நிறைவேற்றப்படும்...
பெண்கள் முன்னேற்றத்திற்கு பல அற்புதமான திட்டங்கள்
பெண்கள் முன்னேற்றத்திற்கு பல அற்புதமான திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர். பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி, வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு, உள்ளாட்சி தேர்தலில் 33% இடஒதுக்கீடு, ஆரம்ப பள்ளிகளில் பெண்களுக்கு முன்னுரிமை, இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டம், மகளிர் சுயஉதவி குழுதிட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று அந்த திட்டம் அனாதையாக்கப்பட்டு உள்ளது.
மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும். கல்வி வேலைவாய்ப்பில் 30%ஆக இருக்கும் இடஒதுக்கீடு 40%ஆக உயர்த்தப்படும். மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்படும். டவுண் பஸ்சில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.
விலை குறைப்பு
பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.4-ம் குறைக்கப்படும். ஒரு சிலிண்டருக்கு ரூ.100 குறைக்கப்படும்.
ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.3 குறைக்கப்படும்.
மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.
அரசு அலுவலகங்களில் 3 லட்சம் இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்த வகை செய்யப்படும்.
வேலை வாய்ப்பு
நீர்நிலைகள், இயற்கை வளங்களை பாதுகாக்க 75 ஆயிரம் இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள்.
சாலைகள், பொதுச் சொத்துக்களை பாதுகாக்க 75 ஆயிரம் சாலைப்பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அறநியைலத்துறை கோவில்களில் 25 ஆயிரம் கோவில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
25 ஆயிரம் மகளிருக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை வழங்கப்படும். இன்னும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சிறுபான்மை மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் உரிய பயன்கள் பெற்றிட போராடுவோம். பின்தங்கிய வகுப்பினருக்காகவும், வக்பு வாரியத்திற்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
கொரோனா நிவாரன நிதி
கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த அனைத்து குடும்பத்தினருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கோரிக்கை வைத்தோம். அப்போது அதை கேலி, கிண்டல் செய்தார்கள். அதிமுக அரசு ரூ.1000 மட்டுமே வழங்கியது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி மீதிதொகையான ரூ.4 ஆயிரம் வழங்குவோம்.
மீனவர்களுக்கு மானியம்
திமுக ஆட்சிக்கு வந்ததும் மீனவர்கள் படகுகள் வாங்க மானியம் வழங்கப்படும். கட்டுமரம், பைபர் படகுகள், நாட்டு படகுகளுக்கு எரிபொருள் 400 லிட்டராக உயர்த்தப்படும். கடற்கரையோர கிராமங்கள் அனைத்திலும் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும். உள்நாட்டு மீனவர்கள் வலை போன்ற மீன்பிடி பொருட்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும். மீனவர்களுக்கான ஐஸ் பெட்டிகள் மானியத்தில் வழங்கப்படும்.
தூத்துக்குடி வளர்ச்சி சிறப்பு திட்டம்
தூத்துக்குடி மாநகரில் மழைநீரை வெளியேற்ற நிரந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
லாரிகள் முனையம் அமைக்கப்படும். விளாத்திகுளத்தில் மிளகாய் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.
கயத்தாறு, கடம்பூர், ஓட்டப்பிடாரம் பகுதியில் குளிரூட்டப்பட்ட கிடங்குகள் அமைக்கப்படும்.
கட்டாலங்குளத்தில் அழகு முத்துகோன் மணிமண்டபம் சுற்றுலாத்தலமாக்கப்படும்.
கழுகுமலையில் அரசு கல்லூரி ஏற்படுத்தப்படும்.
மீனவர்களுக்கு மீன்வளக் கல்லூரியில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
கோவில்பட்டி, நாசரேத்தில் அரசு செவிலியர் கல்லூரி ஏற்படுத்தப்படும்.
தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி. சாலைக்கு வ.உ.சி.சாலை என பெயர் மாற்றம் செய்யப்படும்.
ஓட்டப்பிடாரத்தில் சிப்-காட் அமைக்கப்படும்.
காயல்பட்டினத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தனிவிடுதி ஏற்படுத்தி தரப்படும்.
நதிநீர் இணைப்பு திட்டத்தின் மூலம் நீர்பாசன வசதிகள் ஏற்படுத்தப்படும்.
அனல்மின் நிலையத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள்.
தகவல் தொழில்நுட்ப பூங்கா
தூத்துக்குடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
மணப்பாட்டில் மீன்பிடி இறங்கு துறைமுகம் ஏற்படுத்தப்படும்.
ஆத்தூரில் வெற்றிலை மையம் ஏற்படுத்தப்படும்.
உப்பள தொழிலாளர்களுக்கு தனிநலவாரியம் அமைக்கப்படும். கோவில்பட்டியில் சிறுதொழில் பூங்கா ஏற்படுத்தப்படும்.
ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்
கடந்த 7ஆம் தேதி திருச்சியில் ஒரு மாநில மாநாடு போல ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினோம். அந்த கூட்டத்தில் ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்ற தலைப்பில் 10 வருடத்திற்கான தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை சொல்லியிருக்கிறேன்.
தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மத வெறியை தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.
இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது.
இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய சுய மரியாதையை காப்பாற்றுவதற்காக நடக்கின்ற தேர்தல் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நம்முடைய மாநில உரிமைகள் பறிபோய்க் கொண்டு இருக்கிறது. நம்முடைய தன்மானம் பறி போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி எல்லாவற்றையும் அடமானம் வைத்து விட்டது.
எனவே நம்முடைய தமிழ்நாட்டை காப்பாற்ற, சுயமரியாதையை காப்பாற்ற நடக்கின்ற தேர்தல் என்பதை மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள்.
மீனவர்கள் வாழ்க்கை தரம் உயர, மாநில உரிமைகளை பாதுகாக்க, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கும், சாத்தான்குளம் படுகொலைக்கும் பாடம் புகட்ட, நாம் இழந்திருக்கும் உரிமைகளை மீட்க, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தாருங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு, உங்கள் அன்பிற்கும் உற்சாகத்திற்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments
Thank you for your comments