திமுக எம்பி ஆராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு
சென்னை:
அதிமுக சார்பான புகாரின் அடிப்படையில், ஆ.ராசா மீது அவதூறாகப் பேசுதல், கலகத்தை தூண்டும் வகையில் பேசுதல், தேர்தல் நடத்தை விதியை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தனது பேச்சை வெட்டியும், ஒட்டியும் சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருப்பதாக ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்காக அக்கட்சியின் எம்.பி. ஆ.ராசா பிரசாரம் மேற்கொண்டபோது, அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலமைச்சருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளை பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சை பாமக நிறுவனர் ராமதாசும் கண்டித்தார். மேலும், தேர்தல் நேரத்தில் முதல்வரைத் தனிப்பட்ட முறையில் திமுக தலைவர்கள் தாக்கிப் பேசுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது பேச்சுக்குக் கண்டனம் வலுத்த நிலையில், ஆ.ராசா தன்னிலை விளக்கம் அளித்தார். அதில், “நான் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட பிறப்பையோ, அவருடைய தனிப்பட்ட புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலோ பேச வேண்டிய எண்ணமில்லை. எடப்பாடி பழனிசாமி குறுக்கு வழியில் வந்தவர் என்பதற்காக ஒப்பீடு செய்யப்பட்டது. அதை வெட்டியும், ஒட்டியும் சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருப்பதாக அறிகிறேன். அதைத் தவறாகப் புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆ.ராசாவின் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், ஆ.ராசா மீது அவதூறாகப் பேசுதல், கலகத்தை தூண்டும் வகையில் பேசுதல், தேர்தல் நடத்தை விதியை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
No comments
Thank you for your comments