Breaking News

3 வேளாண் சட்டங்களை ஏன் எதிர்க்கவில்லை?- மு.க.ஸ்டாலின் கேள்வி

ஒரத்தநாடு:

ஒரு விவசாயி ஆள்வது எனக்கு பிடிக்கவில்லை என்று எடப்பாடி சொல்கிறார். எனக்கு விவசாயியை பிடிக்கும், ஆனால் போலி விவசாயியை பிடிக்காது. பச்சை துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகம் செய்பவரை பிடிக்காது. உண்மையான விவசாயி என்றால் மூன்று வேளாண் சட்டங்களை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது எதிர்த்து குரல் கொடுத்திருப்பார். பிரதமரின் கிசான் திட்டங்களில் நடந்த முறைகேடுகளால் தமிழகத்தை மற்ற மாநிலங்கள் ஏளனமாக பார்ப்பதாக தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.



தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இன்று காலை தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம் தொகுதி தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தேர்தல் காலத்தில் மட்டும் அல்லாமல் உங்களுடன் எப்போதும் இருக்கிறேன் என்ற உரிமையுடன் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு உங்கள் முன்பு நிற்கிறேன். அவர்களை சிறப்பான வெற்றி பெற செய்ய உங்களை கேட்டு தேடி, நாடி வந்திருக்கிறேன்.  தலைவர் கலைஞர் பிறந்த இந்த மாவட்டத்துக்கு வந்திருக்கிறேன். பெரிய கோவில்களில் தஞ்சை பெரிய கோவில் இடம்பெற்றுள்ளது. அதேபோன்று அணைகளில் சிறந்த அணை கல்லணை, நெற்களஞ்சியத்திற்கு தஞ்சை, தமிழர்களின் கோட்டையாக விளங்கியதும் தஞ்சை.

தலைவரின் கால் படாத இடமே இங்கு இருக்க முடியாது. நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், டெல்டா விவசாயிகளுக்கு கலைஞர் துரோகம் இழைத்துவிட்டதாக பேசியிருக்கிறார். இவ்வாறு பேசிய அவரது நாக்கு அழுகி போய்விடும். காவிரியில் 50 ஆண்டு காலம் உரிமையை காப்பாற்றி நிலை நாட்டியவர் கலைஞர். அந்த உரிமையை மத்திய அரசின் அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி.

1968-ல் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதும் சரி, அதன் பிறகு முதல்-அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் என்ற நிலையில் இருந்த போதும் சரி, காவிரி பிரச்சனையில் பல போராட்டங்களை கலைஞர் நடத்தி இருக்கிறார். 1990-ல் காவிரி நடுவர் மன்றம் கலைஞர் ஆட்சியில் தான் அமைக்கப்பட்டது.  அந்த காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு அளிக்கும் அதிகாரத்தையும் பெற்றுத்தந்ததும் கலைஞர் தான். 1989-ல் காவிரி நீர் ஆணையம் அமைத்ததும் கலைஞர் ஆட்சியில்தான். 2018-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ளப்பட்டது.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக முதல்வர் அங்குள்ள அனைத்து கட்சி தலைவர்களுடன் டெல்லி செல்கிறார், எனவே அதை தடுத்து நிறுத்தி நமது உரிமையை நிலைநாட்ட இங்குள்ள எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க வேண்டும் என்று நான் குரல் கொடுத்தபோது அதைப்பற்றி இந்த எடப்பாடி பழனிசாமி கவலைப்படவில்லை.

ஒரு விவசாயி ஆள்வது எனக்கு பிடிக்கவில்லை என்று எடப்பாடி சொல்கிறார். எனக்கு விவசாயியை பிடிக்கும், ஆனால் போலி விவசாயியை பிடிக்காது. பச்சை துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகம் செய்பவரை பிடிக்காது. உண்மையான விவசாயி என்றால் மூன்று வேளாண் சட்டங்களை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது எதிர்த்து குரல் கொடுத்திருப்பார். 

இந்த தொடர் போராட்டம் பற்றி எடப்பாடியிடம் கேட்ட போது, அது விவசாயிகள் அல்ல, இடைத்தரகர்கள் என்று கொச்சைப்படுத்தினார். குடிமராமத்து திட்டம் என்று ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கி போலி பில் போட்டு கொள்ளை அடித்திருக்கிறார்கள்.

நெல் கொள்முதல் மையங்களில் நெல்லை கொள்முதல் செய்யாமல் ஊழல் செய்திருக்கிறார்கள். பிரதமரின் கிசான் திட்டங்களில் நடந்த முறைகேடுகளால் தமிழகத்தை மற்ற மாநிலங்கள் ஏளனமாக பார்த்தார்கள். புயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது எடப்பாடி பழனிசாமி, இழப்பீடும் தரவில்லை, நேரில் போய் பார்க்கவும் இல்லை.

எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி அல்ல, வி‌ஷ வாயு. இந்த எடப்பாடி பழனிசாமிக்கு முடிவு கட்ட வருகிற 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை நீங்கள் படித்திருப்பீர்கள். 5 முறை கலைஞர் ஆட்சியில் இருந்தபோது ஏழைகள், விவசாய பெருங்குடி மக்கள், தொழிலாள தோழர்கள், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், வணிகர்கள் ஆகியோருக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்து சாதனை புரிந்தார் என்பது உங்களுக்கு தெரியும்.

ஒவ்வொரு முறை கலைஞர் தேர்தல் அறிக்கை வெளியிடும்போதும், சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று கூறுவார். அவரது மகனாக இருக்கும் இந்த ஸ்டாலினும் அதைத்தான் சொல்கிறேன். தனது 13 வயதிலேயே இந்தியை எதிர்த்து போர்ப்பரணி பாடியவர் கலைஞர். எனது 50 ஆண்டு கால அரசியல் வராற்றில், இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, துணைப்பொதுச் செயலாளராக, பொருளாளராக, துணை முதல்வராக, இன்று தலைவர் மறைவுக்கு பின்னர் தலைவராக உங்களை நான் சந்திக்கிறேன்.

இங்கு இருக்கக்கூடியவர்கள் மட்டும் வேட்பாளர்கள் அல்ல. நானும் வேட்பாளர் தான், முதல்-அமைச்சர் வேட்பாளர். இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதல்-அமைச்சர் ஆகமுடியும். தி.மு.க.வின் வாக்குறுதிகளை மிக தெளிவாக கொடுத்திருக்கிறோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவோம், விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், உழவர் சந்தைகள் சீரமைக்கப்பட்டு திறக்கப்படும்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500-ம், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமும், அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையும், இயற்கை வேளாண்மையை மேம்படுத்த தனி பிரிவும், நம்மாழ்வார் பெயரில் விருதும், மின்தடை இல்லாமல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரமும் வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறோம்.

2006-ல் தலைவர் கலைஞர் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி அன்றைய தினமே கோப்புகளை கோட்டைக்கு வரவழைத்து விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டு உத்தரவிட்டார். நானும் பொங்கல் பண்டிகையையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த போகி பண்டிகையின்போது மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது, கலைஞர் வழியில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலைஞர் வழியில் விவசாயிகள் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தவதாக அறிவித்தேன்.

இதைக்கேட்டு இப்போது கூட்டுறவு கடன்களை எடப்பாடி தள்ளுபடி செய்திருக்கிறார். 10 ஆண்டுகள் அவருக்கு யோசனை வரவில்லை. சட்டமன்றத்தில் நான் பலமுறை கோரிக்கை வைத்தேன். மக்கள் மன்றத்திலும் பேசியிருக்கிறேன். உயர்நீதிமன்றமும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

அப்போது எடப்பாடி பழனிசாமி நிதி ஆதாரம் இல்லையென்று இடைக்கால தடை வாங்கினார். இப்போது தேர்தலை மனதில் வைத்து தள்ளுபடியை அறிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments

Thank you for your comments