Breaking News

செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் தரையிறங்கும் அற்புதமான காட்சி-நாசா வெளியிட்ட சூப்பர் வீடியோ!... உலகச் செய்திகள் தொகுப்பு

வாஷிங்டன், பிப்.24-

செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை தரையிறக்கும் போது எடுக்கப்பட்ட முதல் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.



இந்த வீடியோவில், பறந்து கொண்டிருக்கும் விண்கலத்திலிருந்து பாராசூட் மூலமாக பெர்சர்வன்ஸ் ரோவர் விடுபட்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கயிறு மூலம் கீழே இறக்கப்பட்டு மணற் பாங்கான இடத்தில் இறங்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஜெசிரோ பள்ளத்தில் சில நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக தரையிறங்கியது.


 

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற ஆய்வு விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தியது. செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா? என்ற ஆய்வுக்காக பிரத்யேகமாக இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டது. சுமார் 7 மாத பயணம் தொடர்ந்த பெர்சிவரன்ஸ் செவ்வாய்கிரகத்தை அடைந்து சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்தது.

பெர்சிவரன்ஸ் விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர் செவ்வாய் கிரகத்தின் ஜெசிரோ பள்ளத்தில் சில நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பின்னர் ரோபோட்டிக் ரோவர் தனது கடமையை செய்ய தொடங்கியது. செவ்வாயை படம்பிடித்து, முதல் புகைப்படத்தை நாசாவுக்கு அனுப்பிவைத்தது. செவ்வாயில் தரை இறங்கிய ரோபோட்டிக் ரோவர் ஒரு டன் எடை கொண்டது. இதில் இரண்டு மீட்டர் கொண்ட இரு ரோபோ கரங்களும், 19 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரோபோட்டிக் ரோவர் செவ்வாய் கிரகத்தில் 5 மைல் தூரம் மாதிரிகள் சேகரித்து 2030ம் ஆண்டில் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கபப்பட்டுள்ளது.

ரோவருடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் களமிறக்கப்பட்டுள்ளது. இதை சிறிது தூரம் பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை தரையிறக்கும் போது எடுக்கப்பட்ட முதல் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. 

பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தை நெருங்கும் வேளையில் கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், பறந்து கொண்டிருக்கும் விண்கலத்திலிருந்து பாராசூட் மூலமாக பெர்சர்வன்ஸ் ரோவர் விடுபட்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கயிறு மூலம் கீழே இறக்கப்பட்டு மணற் பாங்கான இடத்தில் இறங்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது.

மேலும், பெர்சர்வன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியதும், செவ்வாயின் காற்றழுத்தம் ஓசையும் துல்லியமாக பதிவாகி உள்ளது. விண்கலத்தின் 3 பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 5 கேமராக்கள் மூலம் இந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரோவர் துல்லியமாக தரையிறங்கும் வீடியாவில் நாசா விஞ்ஞானிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். இவை உண்மையில் அற்புதமான வீடியோக்கள் என்று நாசா விஞ்ஞானிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


சீன அரசியலமைப்பை கறை படுத்துவதை நிறுத்துங்கள்-அமெரிக்காவுக்கு சீனா காட்டம்

பீஜிங், பிப்.24-

சீன அரசியலமைப்பை கறை படுத்துவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது.‌

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அமெரிக்கா சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்தது. வர்த்தக போர், தென் சீன கடல் விவகாரம், உய்குர் இன முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை, என ஒவ்வொன்றாக இரு நாடுகளின் உறவை பலவீனமாக்கிய நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையில் தீரா பகையை உருவாக்கியது. இந்த சூழலில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். இவரது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா சீனா இடையிலான உறவில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ஜோ பைடன் கடந்த 11ம் தேதி சீன அதிபர் ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.  அப்போது சீனாவின் நியாயமற்ற பொருளாதார செயல்பாடுகள், ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து, ஜனநாயக ஆர்வலர்களை ஒடுக்கும் நடவடிக்கைகள், சின்ஜியாங்கில் உய்குர் இன மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் ஜோ பைடன் தனது கவலையை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் இந்த பேச்சுவார்த்தை குறித்து ஜோ பைடன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் சீனாவில் மனித உரிமை மீறல்களுக்கு விளைவுகள் இருக்கும் எனக்கூறி சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் அமெரிக்கா சீனா உறவுகளில் கவனம் செலுத்துவது தொடர்பான சீன வெளியுறவு அமைச்சகத்தின் வருடாந்திர மாநாடு தலைநகர் பீஜிங்கில் நடந்தது. இதில் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி வாங் யி கலந்து கொண்டு உரையாற்றினார்.‌

அப்போது அவர் பேசியதாவது, -முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் சீனாவை நோக்கி முன்வைத்த கடுமையான கொள்கைகளை ஜோ பைடன் நிர்வாகம் சரி செய்ய வேண்டும். அமெரிக்காவை சவால் செய்யவோ அல்லது மாற்றவோ எங்களுக்கு விருப்பமில்லை. அமைதியான சகவாழ்வு மற்றும் அமெரிக்காவுடன் பொதுவான வளர்ச்சியை நாட நாங்கள் தயாராக உள்ளோம். அதேபோல் அமெரிக்காவும் சீனாவின் முக்கிய நலன்கள் தேசிய கவுரவம் மற்றும் வளர்ச்சிக்கான உரிமைகளை மதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சீன கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சீன அரசியலமைப்பை கறை படுத்துவது; தைவானின் பிரிவினைவாத சக்திகளின் தவறான சொற்களையும் செயல்களையும் ஆதரிப்பது; ஹாங்காங், திபெத் மற்றும் சின்ஜியாங் தொடர்பான விவகாரங்களில் சீனாவின் இறையாண்மையும் பாதுகாப்பையும் குறை மதிப்புக்கு உட்படுத்துவது ஆகியவற்றை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சீனாவின் பொருட்களின் மீதான நியாயமற்ற கட்டணங்களை நீக்குவது; சீனாவின் வர்த்தக நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் மீதான ஒருதலைப்பட்ச பொருளாதார தடைகளை நீக்குவது; சீனாவை பகுத்தறிவற்ற முறையில் அடக்குவதை கைவிடுவது ஆகியவற்றுடன் அமெரிக்கத் தரப்பு தனது கொள்கைகளை சீக்கிரம் சரி செய்யும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்பேசினார்.‌


இந்திய-சீன படைகள் வாபஸ்
அமெரிக்கா வரவேற்பு

வாஷிங்டன், பிப்.24-

இந்தியா-சீனா நாடுகள் எல்லையில் பதற்ற சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் மேற்கொண்டு வரும் முயற்சிகளை வரவேற்கிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.



லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி இருதரப்பு ராணுவத்துக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் சுமார் 35 பேரும் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் இருதரப்பும் படைகளை குவித்தன. எனவே இருநாட்டு எல்லையில் போர் பதற்றம் அதிகரித்தது.

இதற்கு மத்தியில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இருதரப்பும் பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்தன. அந்தவகையில் இருநாட்டு லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டது. எல்லையில் பதற்றத்துக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படிப்படியாக படைகளை விலக்குவது எனவும், எல்லையில் அமைதியை மீண்டும் ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. எனினும், கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா தொடர்ந்து அத்துமீறி வந்ததால், இந்திய படைகள் பதிலடி கொடுக்க நேரிட்டது. இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் தொடர்ந்து குவித்ததால் அங்கு போர்ப்பதற்றம் நிலவி வந்தது. அங்கு அமைதியையும், சமாதானத்தையும் மீண்டும் ஏற்படுத்துவதற்காக இரு தரப்பிலும் ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதற்கிடையே, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 2 நாட்களுக்கு முன் மோல்டோ என்ற இடத்தில் அமைந்த சீன தரப்பு அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடைபெற்றது.

பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதிகளில் இருந்து படைகளை இரு தரப்பினரும் வாபஸ் பெற்ற பின்னர், மோதல் ஏற்படும் வகையிலான பிற பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது பற்றி இரு நாட்டினரும் ஆலோசனையில் ஈடுபடுவார்கள் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், லே லடாக் எல்லையின் ஒரு பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறும் பணியில் இந்தியா மற்றும் சீனா நாடுகள் ஈடுபட்டு அதனை நிறைவு செய்தன.

இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பு அதிகாரி நெட் பிரைஸ் கூறியதாவது:

எல்லை பகுதியில் பதற்ற சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் இந்தியா மற்றும் சீனா நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். படைகள் வாபஸ் பற்றிய அறிவிப்புகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

அமைதியான தீர்வு காணப்படுவதற்கான பணியில் இரு தரப்பினரும் ஈடுபட்டு வருவதனை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவோம். கொரோனா பெருந்தொற்று தொடக்க காலத்தில் இருந்தே இந்திய மருந்து தொழிற்சாலையுடன் இணைந்து அமெரிக்க மருந்து தொழிற்சாலை பணியாற்றி வருகிறது என்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம் என தெரிவித்தார்.



இம்ரான் கான் இலங்கை செல்ல இந்தியாவிடம் அனுமதி கோரிய பாகிஸ்தான் அரசு..!  

இஸ்லாமாபாத், பிப்.24-

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விமானம் இலங்கைக்குச் செல்லும்போது, இந்திய வான்வெளியைப் பயன்படுத்திக்கொள்ள இந்தியா அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது இலங்கைக்கு இம்ரான் கானின் முதல் பயணமாக இருக்கும். அவரது விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்குகிறது.



முன்னதாக 2019ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவுக்கான விமானங்களுக்கு தனது வான்வெளியை திறக்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனமான சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பில் வி.வி.ஐ.பி விமானத்திற்கு அனுமதி மறுத்த விவகாரத்தை இந்தியா எழுப்பியது.

சாதாரண சூழ்நிலைகளில், வி.வி.ஐ.பி விமானங்களுக்கு நாடுகளால் அனுமதி வழங்கப்படுகிறது. இருப்பினும், வி.வி.ஐ.பி விமானங்களுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்தது ஒரு தவறான செயலாகும்.

இதற்கிடையே இம்ரான் காரனின் இலங்கை பயணத்தில் பாராளுமன்ற உரை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது இலங்கை அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பு ஊடகங்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளில், ஏற்கனவே சீன விவகாரத்தில் இந்தியாவின் அதிருப்தியை சம்பாத்தித்துக் கொண்டுள்ள இலங்கை அரசு, இம்ரான் கான் நாடாளுமன்ற உரையை ரத்து செய்வதன் மூலம், இந்தியாவுடனான மோதல் அதிகரிப்பதைத் தவிர்க்க விரும்புகிறது எனும் ரீதியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் அந்த கட்டுரைகளில், இந்தியா மனிதாபிமான முறையில் கொரோனா தடுப்பூசி வழங்கி வருவதையும் பாராட்டியுள்ளது. இந்தியா சமீபத்தில் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை இலங்கைக்கு பரிசாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



மார்ச் 27ம் தேதி வரை
இத்தாலியின் 20 மண்டலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு..!

ரோம், பிப்.24-

இத்தாலியின் 20 மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு வருகிற மார்ச் 27ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.



இத்தாலி நாட்டின் பிரதமராக கடந்த 13ம் தேதியில் இருந்து மரியோ திராகி பொறுப்பு வகித்து வருகிறார். அந்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு நாட்டின் 20 மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு வருகிற மார்ச் 27ம் தேதி வரை தடையை நீட்டித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.மேலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திப்பதற்கான கட்டுப்பாடுகளையும் அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒரு நபரின் வீட்டுக்கு 2 பேருக்கு கூடுதலானோர் செல்ல முடியாது. அப்படி செல்வோரும் ஒரு நாளுக்கு மேல் தங்க முடியாது. சிவப்பு மண்டலங்களில் இருப்போர் வேறு ஒருவரை சந்திக்க செல்வதற்கே அனுமதி இல்லை.

எனினும், பணி, சுகாதாரம் அல்லது அவசர காரணங்களுக்காக பயணம் செய்வதற்கு அல்லது ஒருவர் தனது வீட்டுக்கு திரும்ப வேண்டிய அவசியத்தில் உள்ளவர் ஆகியோருக்கு இந்த மண்டல போக்குவரத்து தடையானது பொருந்தாது என தெரிவித்துள்ளது. இத்தாலி நாட்டிற்குள்ளேயே சுற்றுலா செய்வதற்கான தடையும் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


No comments

Thank you for your comments