Breaking News

ஆட்சியில் பங்கேற்பது குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்-எல்.முருகன் - செய்தி தொகுப்பு

நாகர்கோவில், பிப்.23-

அமைச்சரவையில் பங்கு குறித்து தேர்தலுக்கு பிறகு தேசிய தலைமை முடிவு செய்யும் என்று எல் முருகன் கூறியுள்ளார்.



பாரதீய ஜனதா மாநில தலைவர் முருகன் நாகர் கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, 

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பாரதீய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் சுற்றுப் பயணம் மேற் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நான் நாகர்கோவில் வந்துள்ளேன். கோவை மேட்டுபாளையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சி.டி. ரவி பங்கேற்றுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாரதீய ஜனதாவை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மூத்த தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

வருகிற 25ம் தேதி பிரதமர் மோடி கோவையில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இது முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஆகும். எனவே இந்த பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

28ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா விழுப்புரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். தேசிய தலைவர் நட்டா, வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் குமரி மாவட்டம் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க கடினமாக வேலை செய்து வருகிறோம்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடை தேர்தலிலும், 6 சட்டமன்ற தொகுதிகளிலும், எங்களது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். குமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்தது அவரது இயலாமையை காட்டுகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவர்களாகவே ராஜினாமா செய்தனர். இதில் பாரதீய ஜனதா கட்சியின் தலையீடு கிடையாது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து பலரும் பாரதீய ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள்.

சமையல் கியாஸ் விலை கடந்த 2013-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது குறைவாகவே உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தமட்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையை கருத்தில் கொண்டே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழக அரசும், மத்திய அரசும் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சரியான நேரத்தில் சரியான அறிவிப்பு வரும்.

அதேபோல் காவிரி- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு கர்நாடகா முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக நலனே பாரதீய ஜனதாவுக்கு முக்கிய மாகும். ஆகவே எங்களது நலனை விட்டுக் கொடுக்க முடியாது.  காங்கிரசை ராகுல்காந்தி ஒழித்து வருகிறார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளார். தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி இல்லாமல் ஆகி விடும். தமிழக அரசு ஏராளமான நல்ல திட்டங்களை செய்து வருகிறது. அதை மக்களிடம் கொண்டு செல்லவே விளம்பரம் செய்யப்படுகிறது. அதில் தவறு இல்லை.

பாரதீய ஜனதா கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது என்பதை விட, எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பதே எங்களின் நோக்கமாகும். நாங்கள் இரட்டை இலக்க உறுப்பினர்களுடன் சட்டமன்றத்தில் இருப்போம். அமைச்சரவையில் பங்கு குறித்து தேர்தலுக்கு பிறகு தேசிய தலைமை முடிவு செய்யும். கன்னியாகுமரி தொகுதியில் பாரதீய ஜனதாவின் இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? என்பது குறித்தும் தேசிய தலைமையே முடிவு எடுக்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

    ===============================================================     

செய்தித்தாள்கள், தொலைக்காட்சியில் இனி அரசு விளம்பரங்கள் வெளிவராது-தமிழக அரசு தகவல்

சென்னை, பிப்.23-

தமிழக அரசின் விளம்பரங்கள்  இனி  செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளிவராது.  பிப்ரவரி 18ம் தேதி முதல் விளம்பரங்கள் வெளியிடுவதை தமிழக அரசு முற்றிலுமாக நிறுத்திவிட்டது என சென்னை உயர்நீதி மன்றத்தில் திங்கள்கிழமை  தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.



ஏறக்குறைய அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும், செய்தித்தாள்களிலும் விளம்பரங்கள் மூலம் வாக்காளர்களை கவர்ந்திழுக்க அதிமுக அரசு கோடிக்கணக்கில் பொது நிதியை செலவழித்துள்ளதாக குற்றம்சாட்டி திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வழக்கறிஞர் ஜெனரல் விஜய் நாராயண் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் பதிலை சமர்ப்பித்தார். “கடந்த நான்கு ஆண்டுகளாக மாநில அரசின் செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் மட்டுமே விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இந்திய தேர்தல் ஆணையம் (இ.சி.ஐ) மாநிலத்திற்கான தேர்தலை அறிவித்தவுடன் இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படும். ஏற்கெனவே கடந்த வியாழக்கிழமை முதல் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால் இந்த விவகாரம் பயனற்றதாகிவிட்டது” என்று வழக்கறிஞர் விஜய் நாராயண் கூறினார்.

முன்னதாக, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி வில்சன்  ‘‘சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஆகியவை அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள். கடந்த இரண்டு மாதங்களாக மாநில முதல்வர் அனைத்து தொலைக்காட்சி சேனல்கள், செய்தித்தாள்கள் மற்றும் அனைத்து வலைத்தளங்களிலும் வணிக இணைய தளங்களில் விளம்பரப்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என வில்சன் தெரிவித்தார்.

இதற்கு, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இருவரும் இது ஒரு ஆளும் கட்சியாக இருப்பதன் நன்மைகள். ஆட்சிக்கு வந்ததும் திமுகவுக்கும் இந்த நன்மை கிடைக்கும் என்றும் கூறினர்

வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான  மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவிடம் கருத்துக்களைக் கோரியுள்ளதாகவும், பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கோரினார். இறுதியில் இந்த வழக்கு விசாரணை மார்ச் 2ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    ===============================================================     

தமிழக சட்டசபையில் 
வ.உ.சிதம்பரனார், சுப்பராயன், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் படங்கள் திறப்பு-முதல்வர்

சென்னை, பிப்.23-

தமிழக சட்டசபை மண்டபத்தில் வ.உ.சிதம்பரனார், பி.சுப்பராயன், முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் முழு உருவ படங்கள் செவ்வாய் கிழமை அன்று (23.02.2021) புதிதாக திறக்கப்பட்டன.

தமிழக சட்டசபை மண்டபத்தில் ஏற்கனவே திருவள்ளுவர், பெரியார், காமராஜர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட 12 தலைவர்கள் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும் 3 தலைவர்களின் படங்கள் சட்டசபையில் வைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி வ.உ.சிதம்பரனார், பி.சுப்பராயன், முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் முழு உருவ படங்கள் செவ்வாய் கிழமை அன்று (23.02.2021) புதிதாக திறக்கப்பட்டன.

வ.உ.சிதம்பரனார், பி.சுப்பராயன் ஆகியோர் நின்ற நிலையிலும், ராமசாமி ரெட்டியார் இருக்கையில் அமர்ந்த நிலையிலும் உள்ள படங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த 3 படங்களும் சட்டசபை மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த படங்களின் திறப்பு விழா இன்று (23.02.2021) மாலை தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 தலைவர்களின் படங்களை திறந்து வைத்தார். விழாவில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

புதிதாக திறக்கப்பட்ட 3 படங்களையும் சேர்த்து தமிழக சட்டசபையில் வைக்கப்பட்ட தலைவர்களின் படங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

    ===============================================================     

நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் விதிமுறையை சபாநாயகர் கடைபிடிக்கவில்லை-நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி, பிப்.23-

புதுவை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் விதிமுறையை சபாநாயகர் சிவக்கொழுந்து கடைபிடிக்கவில்லை என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.



புதுவை சட்டசபையில் முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதையடுத்து காங்கிரஸ்-தி.மு.க., சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சபையில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து முதலமைச்சர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனால் புதுவை அரசு கவிழ்ந்தது. 

சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்தாமல் அரசு பெரும் பான்மையை இழந்தது என்று எப்படி சொல்லமுடியும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்து சட்டப் பேரவையில் உரையாற்றினேன். அந்த நேரத்தில் அரசு கொறடா அனந்தராமன் ஜனாதிபதி தேர்தலில் நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உரிமையில்லை என்ற பிரச்சினையை எழுப்பினார். அதனை சபாநாயகர் ஏற்காத காரணத்தினால் நாங்கள் எங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கூறி வெளிநடப்பு செய்தோம். அதன் பிறகு நான் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் சரியான விதிமுறையை கடைபிடிக்கவில்லை. அந்த தீர்மானத்தை நான் முன்மொழிந்து பேசிய பிறகு அந்த தீர்மானத்தின் மீது வாக்கொடுப்பு நடத்த வேண்டும்.

நாங்கள் வெளிநடப்பு செய்தாலும் கூட முதலமைச்சர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுகிறேன் என்று சபாநாயகர் அறிவிக்க வேண்டும். ஆளுங்கட்சியில் யாரும் இல்லாததால் எதிர்க் கட்சியின் எண்ணிக்கையை எண்ணி எவ்வளவு பேர் எதிர்த்து வாக்களிக்கிறார்கள் என்று பதிவு செய்த பிறகு தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்க வேண்டும்.

அதைவிட்டு விட்டு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் தீர்ப்பு வழங்குகிறார். வாக்கெடுப்பு நடத்தாமல் எப்படி பெரும்பான்மையை இழந்துவிட்டது என்று சபாநாயகர் சொல்ல முடியும்.? இது ஒரு சட்டப் பிரச்னை. இதுசம்பந்தமாக சட்டவல்லுநர்களுடன் கலந்து பேசுவோம். இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

    ===============================================================     

புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடிவு!

புதுச்சேரி, பிப்.23:

புதுச்சேரி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி துணை நிலை ஆளுநர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



அங்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்காததால் கவிழ்ந்தது. இதனிடையே, புதிய அரசு அமைக்க எதிர்கட்சிகள் உரிமை கோரவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகளை முழுமையாக வீடியோவில் பதிவு செய்து சட்டசபை செயலர் துணை நிலை ஆளுநருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். இதன் மூலம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, துணை நிலை பொறுப்பு ஆளுநர் தமிழிசை அறிக்கை அனுப்புவார் என்றும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த அவர் பரிந்துரைப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


No comments

Thank you for your comments