Breaking News

ஒடிடி மற்றும் சமூக வலைதளங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

புதுடெல்லி, பிப்.26-

ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் செயல்படுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைதங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். அதன்படி, பயனாளர்களின் புகார்களையும், குறைகளையும் விரைந்து தீர்ப்பதற்கு மூன்று படிநிலைகளுடன் கூடிய அமைப்பு புதிதாக உருவாக்கப்படுகிறது. இதில் வெளியீட்டாளர், சுய ஒழுங்குமுறை குழு மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இடம்பெற்றிருக்கும். 

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலோ அல்லது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நபரின் தலைமையிலோ ஒழுங்குமுறை குழு செயல்பட்டு நிறுவனங் களுக்கு அறிவுறுத் தல்களை வழங்கும். புகார்கள் மற்றும் குறைகளை களைவதற்கு சமூக வலைதள நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்த தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஏதேனும் உள்ளடகத்தை நீக்க வேண்டியிருந்தால் அதற்கான காரணத்தை பயனாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தவறான தகவல்கள், வதந்திகளை முதலில் வெளியிட்டது யார் என்பதை சமூக ஊடகங்கள் தெரியப்படுத்த வேண்டும். தவறான தகவல்களை பரப்பினால் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப்தொடர்கள் போன்றவை, 13,16 மற்றும் 18 போன்ற எத்தகைய வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்ப்பதற்கு உரியது என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும். புதிய செய்தி இணையதளங்களை தொடங்குவதற்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் இறையான்மைக்கு அச்சுறுத்தலாகவும், சிறார்களுக்கு தீங்கிழைக்கும் விதமாகவும் உள்ள கன்டென்ட்டுகள் தடை செய்யப்பட வேண்டும். அத்தகைய கன்டன்ட்டுகள் நீக்குமாறு அரசோ, நீதிமன்றமோ உத்தரவிட்டால் 36 மணி நேரத்தில் அவற்றை சமூக ஊடக நிறுவனங்கள் நீக்க வேண்டும் உள்பட பல்வேறு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


No comments

Thank you for your comments