Breaking News

குஜராத் மாநகராட்சி தேர்தலில்.... பாஜகவுக்கு எதிராக புதிய சக்தியாக உருவெடுத்த ஆம் ஆத்மி

சூரத், பிப்.24-

குஜராத் மாநிலம் சூரத் நகரின் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனால் குஜராத் அரசியல் களத்தில் பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது.



குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த மாநகராட்சிகள் பாஜக வசம் இருந்து வருகிறது. இந்த தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். விறுவிறுப்பாக நடந்த இந்த தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.



இந்தநிலையில் 6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்  முடிவுகள் வெளியானது. மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 236 வார்டுகளில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெறும் 49 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதர கட்சிகள் 17 இடங்களில் வெற்றி பெற்றன.

அதேசமயம் முக்கிய நகரான சூரத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 120 இடங்களில் பாஜக 93 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

ஆம் ஆத்மி வெற்றி பெற்ற பெரும்பாலான இடங்கள் காங்கிரஸ் கைவசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.  சூரத் மாநகராட்சியில் கிடைத்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து குஜராத் ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளர் குலாப் சிங் கூறுகையில், ‘‘பாஜகவின் கோட்டையை ஆம் ஆத்மி உடைத்துள்ளது. கெஜ்ரிவாலின் ‘டெல்லி மாடல்’ குஜராத்தில் நம்பிக்கை அளிக்கிறது. வரும் உள்ளாட்சி தேர்தல்களில் ஆம் ஆத்மி இன்னும் நிறைய இடங்களை கைப்பற்றும்’’ என குலாப் சிங் கூறினார்.

சூரத் நகராட்சி தேர்தல் வெற்றி குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘‘புதிய அரசியல் களத்தை உருவாக்கியுள்ள குஜராத் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’என தெரிவித்துள்ளார். மேலும்இந்த வெற்றியை அடுத்து குஜராத் மாநிலம் செல்லவுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு சூரத் நகரில் நடைபெறவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் வாகன பேரணியில் பங்கேற்கிறார்.

ஆம் ஆத்ம் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் பாஜக தலைவர் சி.ஆர். பாடில், ‘‘காங்கிரஸ் வசம் இருந்த பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி தங்க தட்டில் அடிக்கப்பட்ட இரும்பு ஆணி போன்றது. ஆம் ஆத்மி கட்சியை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நாங்கள் ஆலோசிப்போம்’’ என தெரிவித்துள்ளார்.

குஜராத் நகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘‘குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள் உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது. மக்கள் நலனை முன்னிருத்தி களம் இறங்குபவர்களை மக்கள் கைவிட்டதே இல்லை. தமிழகத்திலும் இது நிகழும். #இனி_நாம்’’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments