பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து மின்சார பைக்கில் பயணித்த மம்தா பானர்ஜி
கொல்கத்தா, பிப்.26-
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை மாநில தலைமை செயலகத்திற்கு மின்சார பைக்கில் சென்றார். மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் ஓட்டிய மின்சார ஸ்கூட்டியில் பின்னே அமர்ந்து மம்தா சவாரி செய்தார்.
சமீப காலமாக பெட்ரோல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரு.100 ஆக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த 2 வாரங்களில் 2 முறை உயர்த்தப்பட்டு ரூ.810 ஆக அதிகரித்துள்ளது.
எரிபொருள்களின் தொடர் விலை உயர்வு சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
எரிபொருள் உயர்வை கண்டிக்கும் வகையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மின்சார வாகனத்தில் தலைமை செயலகத்திற்கு சென்றார். எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வாசகம் அடங்கிய ஒரு பலகையை அணிந்தப்படி தென் கொல்கத்தாவில் உள்ள தனது காளிகாட் இல்லத்திலிருந்து ஹூக்லி ஆற்றின் மறு கரையில் உள்ள நபன்னா பில்டிங்ஸ் வரை மம்தா பயணம் மேற்கொண்டார்.
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி பேசுகையில், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை நாங்கள் எதிர்க்கிறோம். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.800 ஆக உயர்ந்துள்ளது. மண்ணெண்ணெய் மாநிலத்தில் கிடைப்பதில்லை.
நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை என்ன ? இப்போது விலை என்ன ? பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு நாட்டின் சாமானிய மக்களுக்கு அதிக சுமை தருவதற்கான ஒரு முயற்சி என மம்தா பானர்ஜி கூறினார். மேலும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக தனது கட்சி தொடர்ச்சியான எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மோடேராவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை பிரதமர் நரேந்திர மோடி பெயருக்கு மாற்றப்படுவதை குறிப்பிட்ட மம்தா பானர்ஜி அவர்கள் நாட்டின் பெயரையும் மாற்றுவார்களா என்று நினைக்க தோன்றுகிறது’’ என்று விமர்சித்தார்.


No comments
Thank you for your comments