மக்கள் நீதி மய்யம் மாநாடு மார்ச் 7-ந்தேதிக்கு தள்ளிவைப்பு: கமல்ஹாசன்
சென்னை, பிப்.14-
மக்கள் நீதி மய்யம் மாநாடு வருகிற 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது மார்ச் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழா - மாநாடு வருகிற 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் 13/02/2021 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் பொருளிலான நமது கட்சியின் மாநில மாநாட்டினை பிப்.21-ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தோம். அதற்கான அனுமதி கேட்டு கடந்த 6-ஆம் தேதியே காவல்துறையை அணுகினோம்.
இந்த அறிவிப்பினை எழுதும் நிமிடம் வரை அனுமதி கிடைக்கவில்லை. கோவிட் பெருந்தொற்று காலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடும் நிகழ்வினை மிகுந்த கவனமுடன் ஒருங்கிணைக்க போதிய கால அவகாசம் வேண்டும். காவல்துறை அனுமதி தாமதிக்கப்படுவதால் வேறு வழியின்றி மாநாட்டு நிகழ்வை மார்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்.
மாநாடு ஒத்திவைக்கப்படுகிறதே தவிர நமது கூடுகைகள் தொடர்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
அதன்படி, பிப். 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா சென்னை மேற்கு தாம்பரத்தில் அமைந்துள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீலியோ முத்து உள்ளரங்கத்தில் விமரிசையாக நடைபெறும்.
மார்ச் 7-ஆம் தேதி சீரமைப்போம் தமிழகத்தை, மக்கள் நீதி மய்யத்தின் மாபெரும் தேர்தல் மாநாடு வண்டலூர் ஒரகடம் சாலையில் உள்ள மன்னிவாக்கத்தில் பிரமாண்டமாக நடைபெறும்.
மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் அன்று ‘பெண் சக்தி’ எனும் தலைப்பில் கட்டமைப்பு மற்றும் சார்பணிகளில் உள்ள அனைத்து மகளிரும் ஒன்றுகூடி பெண்மையைப் போற்றும் பெருநிகழ்வு காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அரங்கில் நடைபெறும்.
ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம்.
நாளை நமதே!
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


No comments
Thank you for your comments