தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, பிப்.25-
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், அரசு பணியாளர்களின் ஒய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இன்று காலை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2021 - 2022ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது.
சட்டப்பேரவையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் இன்றைய (25.2.2021) அறிக்கையில்,
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியிலிருந்து ஒய்வு பெறும் வயது, 58-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது. அரசு பணியாளர்களின் ஒய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது 31.5.2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு, இன்றைய 2021 - 2022ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


No comments
Thank you for your comments