அதிகரிக்கும் அரசின் கடன் சுமை.... ரூ.5.70 லட்சம் கோடியாக உயரும்!
சென்னை, பிப்.24-
தமிழக அரசின் கடன் சுமை அடுத்த ஓர் ஆண்டில் ரூ. 5.70 லட்சம் கோடியாக உயரும் என்று துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
தற்போதுள்ள தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக விரைவில் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய் கிழமை அன்று (23.02.2021) கலைவானர் அரங்கில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பைத் தொடர்ந்து தனது பட்ஜெட் உரையை தாக்கல் செய்ய தொடங்கிய அவர், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது தமிழக அரசின் தற்போதைய கடன்சுமை ரூ. 4.85 லட்சம் கோடியாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தக் கடன் சுமை அடுத்த ஓராண்டில் ரூ5.7 லட்சம் கோடியாக உயரும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல 2020-21ஆம் ஆண்டில் தமிழக அரசின் மூலதன செலவினம் 14.41% உயர்ந்து 43,170.61 ரூபாய் கோடியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், வருவாய் பற்றாக்குறை 41,417.30 கோடியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கொரோனா தடுப்பில் தமிழகம் முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது என்றும் கொரோனா காலத்திலும் கூட தமிழ்நாடு அதிகளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது என்றும் அவர் கூறினார்.
குடும்பத்தலைவர் விபத்தில் இறந்தால்ரூ.4 லட்சம்-புதிய காப்பீட்டு திட்டம்
சென்னை, பிப்.24-
தமிழகத்தில் குடும்ப தலைவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கும் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய் கிழமை அன்று (23.02.2021) தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, புதிய அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசி மற்றும் யுனைடெட் காப்பீடு இந்தியா திட்டத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் தொடங்கப்படும். இதற்கான தொகையை தமிழக அரசே ஏற்கும் என கூறப்பட்டுள்ளது.
இதன்படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் இருக்கும் குடும்ப தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கப்படும். குடும்ப தலைவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால், ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குடிநீர் பஞ்சத்தை போக்க நீர் குழுமம் அறிவிப்பு
சென்னை, பிப்.24-
சென்னை மாநகரில் உள்ள நீர்வளங்களை திட்டமிட்டு நீர் பாதுகாப்பை மேம்படுத்த ஏதுவாக புதிதாக நீர்க் குழுமம் தொடங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை செவ்வாய் கிழமை அன்று (23.02.2021) தாக்கல் செய்து பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சென்னை மாநகரின் வளர்சிக்காக உலக வங்கியின் துணையுடன் திட்டம் வகுப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன்படி, பொது சுகாதாரம், போக்குவரத்து மற்றும் குடிநீர் ஆகியவற்றில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் இதற்காக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
சென்னை நகரின் நீர்வளங்களை திட்டமிட்டு நீர்ப் பாதுகாப்பை மேம்படுத்த புதிய நீர்க் குழுமம் உருவாக்கப்படும் என்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னையில் 2019ம் ஆண்டு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசு சென்னையின் நீர் பாதுகாப்பை மேம்படுத்த புதிய நீர்க் குழுமம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் 2021
எம்ஜிஆர் போட்டியிட்ட ஆலந்தூர் தொகுதியில் களமிறங்கும் கமல்
சென்னை, பிப்.24-
ஆலந்தூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு வலுவாக உள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக 3-வது அணி அமைக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். இதற்காக மயிலாப்பூர், ஆலந்தூர், தி.நகர், வேளச்சேரி ஆகிய 4 தொகுதிகளில் தீவிரமாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் களம் இறங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி 1 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகளை பெற்றது. இந்த தொகுதிக்குள் வரும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 22 ஆயிரம் ஓட்டுகள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து கமல்ஹாசன் அங்கு களமிறங்க கூடுதல் வாய்ப்புள்ளதாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆலந்தூர் தொகுதியை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். 1967 மற்றும் 1971 ஆகிய தேர்தல்களில் எம்.ஜி.ஆர். களமிறங்கி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவும் கமல்ஹாசன் அங்கு போட்டியிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். இதுதொடர்பாக ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி ஒருவர் பரபரப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளரான கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுவது பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்காக தொலைபேசி எண்களையும் அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து ஆலந்தூர் தொகுதியிலேயே கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலந்தூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு வலுவாக உள்ளதாக அந்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பூத் கமிட்டியும் அங்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கட்சியினர் கூறியுள்ளனர். இதனால் கமல்ஹாசன் அங்கு போட்டியிடும் பட்சத்தில் மக்களை சந்திப்பது மிகவும் எளிதாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம்
திருப்பூர், பிப்.24-
திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்தது.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியராக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். அதன் ஒருபகுதியாக நேற்று முன்தினம் காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். மாநில துணை தலைவர் பாக்கியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எல்லம்மாள், பொருளாளர் பேபி முன்னிலை வகித்தனர்.
அப்போது அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், பல ஆண்டுகளாக பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அங்கன்வாடி ஊழியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் அனைவரும் சாலையிலேயே சமைத்து சாப்பிட்டு அங்கேயே படுத்து தூங்கினர். நேற்று காலை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக அந்த பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் உடுமலை, பல்லடம், காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்களை 7-வது ஊதியக்குழுவில் அரசு ஊழியர் ஆக்குவேன் என அப்போதைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அதனை இதுவரை அரசு நிறைவேற்றவில்லை. நாங்கள் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எடை எடுத்தல், வீடுகளுக்கு சென்று சத்துமாவு கொடுத்தல், தடுப்பூசி போட வைத்தல் பணிகளை செய்து வந்துள்ளோம். எனவே எங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் ஃப்ரீ பயருக்காக
2 வது மாணவன் பலி..!
தூத்துக்குடி, பிப்.24-
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் ப்ரீபயர் விளையாட தாயின் ஸ்மார்ட் போன் கிடைக்காத விரக்தியில், 6 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ப்ரீ பயர் அரக்கனுக்கு 2 வது பலி நிகழ்ந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிமுருகன், கூலித் தொழிலாளியான இவருக்கு 16 வயதில் மதன், 13 வயதில் பாலகுரு ஆகிய இரு மகன்கள் இருந்தனர். இதில் இளையவன் பாலகுரு தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
மதன் மற்றும் பாலகுரு இருவரும் ஆன்லைன் வகுப்புகளை தாயின் செல்போனில் படித்து வந்த நிலையில் அதன் மூலமாக பப்ஜி விளையாட்டுக்கும் அது தடை செய்யப்பட்ட பின்னர் ப்ரீ பயர் விளையாட்டுக்கும் அடிமையாகி உள்ளனர். இதனால் செல்போனுக்கு சண்டை இடுவதையும் வழக்கமாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது தாய் ஜோதிமணி மகன்கள் இருவருக்கும் விளையாடுவதற்காக செல்போனை கொடுக்க மறுத்துள்ளார்.
இந்த நிலையில் தந்தை சீனிமுருகன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் அண்ணன் மதன் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டதால், தனக்கு செல்போன் விளையாட கிடைக்கும் அதில் ப்ரீ பயர் விளையாடலாம் என்று பாலகுரு நினைத்துள்ளான். ஆனால் தாய் ஜோதிமணி வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், பாலகுரு அடம்பிடித்தும் செல்போனை கொடுக்காமல் கையோடு எடுத்துச் சென்று விட்டார்
செல்போன் கிடைக்காத ஏக்கத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பாலகுரு மனம் உடைந்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கயிற்றால் தூக்கிட்டு விபரீத தற்கொலை முடிவை தேடிக் கொண்டதாக கூறப்படுகின்றது. வெளியூரில் இருந்து வீடு திரும்பிய தாய் ஜோதி மணி தன் மகன் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த விளாத்திகுளம் போலீசார் பாலகுருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிறுவன் பாலகுருவின் உயிரிழப்பு, தமிழகத்தில் ப்ரீ பயர் விளையாட்டுக்காக பலியான 2 வது உயிராகும், இந்தியன் ஆப் என்ற ஒற்றை வார்த்தையால் சிறுவர்களை மூளைச் சலவை செய்து மாதம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டுகின்றனர் ப்ரீ பயர் விளையாட்டு செயலியை நிர்வகிக்கும் குழுவினர்.
ஆன் லைன் கல்விக்காக பெற்ற ஸ்மார்ட் போன் வாயிலாக அழையா விருந்தாளியாக மாணவர்களின் மனதிற்குள் நுழைந்து கொடிய வைரஸ் போல பொன்னான நேரத்தோடு அவர்களது வாழ்க்கையையும் வீணடித்துக் கொண்டிருப்பது தான் சோகம். செல்போன் பயன்படுத்தும் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் கவனிக்கத் தவறினால் என்ன மாதிரியான மனச் சிதைவுக்கு ஆளாவார்கள் என்பதற்கு இந்த சோகச்சம்பவம் மற்றும் ஒரு சாட்சி..!







No comments
Thank you for your comments