Breaking News

விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை: அமலாக்கத்துறை கடிதம்

டெல்லி, ஏப்.22-
ரூ.9 ஆயிரம் கோடிவரை கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வர வெளியுறவு அமைச்சகத்துக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
 
தொழில் அதிபரும், டெல்லி மேல்சபை எம்.பி.யுமான விஜய் மல்லையா எஸ்.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கினார்.

ஆனால் அதை திருப்பி செலுத்தவில்லை. இதனால் வங்கிகள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 2 ஆம் தேதி இங்கிலாந்திற்கு விஜய் மல்லையா சென்று விட்டார்.

 இதைத் தொடர்ந்து, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கத்துறையும் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய் மல்லையாவிற்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில், அமலாக்க பிரிவு இயக்குனரகத்தின் கோரிக்கையை ஏற்று, வெளியுறவுத்துறை அமைச்சகம் விஜய் மல்லையாவின் சிறப்பு பாஸ்போர்ட்டை 4 வாரங்களுக்கு முடக்கி வைத்தது.

விஜய் மல்லையா மீது, சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஐடிபிஐ வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

பின்னர், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று, விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைதுவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகத்துக்கு, அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், விஜய் மல்லையா  விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதால் அவருடைய பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது? என குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக்கோரி சிபிஐ க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதயுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா சார்பில் அவருடைய வழக்கறிஞர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். மூடிய உறையில் தாக்கல் செய்யப்பட்ட அதில், விஜய் மல்லையாவின் சொத்து விவரம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments