ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக மெகபூபா முப்தி இன்று பதவியேற்பு
ஸ்ரீநகர், ஏப்ரல் 04-
ஜம்மு காஷ்மீரில் பாஜக - மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) கூட்டணி
கடந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி பொறுப்பேற்றது. இதில் மக்கள் ஜனநாயகக்
கட்சியின் முப்தி முகமது சையது முதல்வராகவும், பாஜகவின் நிர்மல் சிங் துணை
முதல்வராகவும் பதவியேற்றனர். இதனிடையே முப்தி முகமது சையது உடல்நலக் குறைவு
காரணமாக கடந்த ஜனவரி 7-ந் தேதி காலமானார்.
இதைத் தொடர்ந்து புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டதால் அங்கு
ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர
மோடியுடன், முப்தியின் மகள் மெகபூபா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் மக்கள் ஜனநாயகக் கட்சி- பாஜக கூட்டணி அரசு
அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக மெகபூபா முப்தி இன்று
காலை 11.00 மணிக்கு பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு ஆளுநர் வோரா பதவி
பிரமாணம் செய்து வைக்கிறார். அஸ்ஸாமின் சைதா அன்வாரா தைமூருக்கு
அடுத்தபடியாக முதல்வராக பதவியேற்கும் நாட்டின் 2-வது முஸ்லிம் பெண் என்ற
பெருமையும் மெகபூபா வுக்கு கிடைக்கவுள்ளது.
இந்நிலையில் அமைச்சரவையில் யார், யாருக்கு எந்தெந்த தொகுதிகளை
ஒதுக்குவது என்பது குறித்து துணை முதல்வராக பதவியேற்கவுள்ள பாஜகவின்
நிர்மல் சிங் மற்றும் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த மெகபூபா நேற்று
ஜம்மு வந்து சேர்ந்தார். அப்போது ஏற்கெனவே இருந்த அமைச்சரவையில் எந்த
மாற்றமும் செய்யாமல் அப்படியே தொடருவது என அவர் முடிவு செய்திருப்பதாக
கூறப்படுகிறது.
அதே சமயம் பாஜக தரப்பில் ஒரேயொரு அமைச்சரை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக வேறொருவரை அமைச்சராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மெகபூபாவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற விவகாரத் துறை
அமைச்சர் வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் ஜிதேந்திரா சிங், முன்னாள்
முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
No comments
Thank you for your comments