Breaking News

அசாம், மேற்கு வங்கத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு

கவுகாத்தி / கொல்கத்தா, ஏப்.11-
Phase 2 of Assam, West Bengal polls todayஅசாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்ட சட்டசபைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குபதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

காலை முதலே வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. காலை 9 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் 20 சதவிகித வாக்குகளும், அசாமில் 15.90 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசாமில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி மொத்தமுள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளில், 65 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இதில், 82.21 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்நிலையில், இரண்டாவது மற்றும் இறுதி வாக்குப்பதிவு 61 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில் 525 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநில முன்னாள் முதல்வரும், அசாம் கணபரிஷத் தலைவருமான பிரபுல்ல மகந்தா,பாஜக தலைவர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அனைத்து இந்திய ஐக்கிய மக்கள் முன்னணி தலைவர் அத்ருத்தீன் அஜ்மல் உள்ளிட்டோர் இன்றைய வேட்பாளர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஒரு கோடியே 4 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக, 12,699 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நடைபெறும் கோல்பரா மாவட்டத்தில் சமீபத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மேலும் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த சில பகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எவ்வித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 7 மணிமுதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 15.90 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதனடிப்படையில் 31 தொகுதிகளுக்கான வாக்குபதிவு இன்று நடைபெறுகிறது. 21 பெண் வேட்பாளர்கள் உட்பட 163 பேர் களத்தில் உள்ளனர். மொத்தம் 70 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். பதற்றம் மிகுந்த வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 9 மணி நிலவரப்படி 20 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மேற்கு வங்க மாநில தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Thank you for your comments