20 ஓவர் ஆசிய கோப்பையை வென்றது இந்தியா
மிர்புர், மார்ச் -
இந்தியா - வங்காளதேசம் மோதும் ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மழை காரணமாக போட்டி தொடங்க தாமதமானதால் 20 ஓவருக்கு பதிலாக 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
தொடங்விருந்த சில மணி நேரங்களுக்கு முன் வங்காளாதேசத்தின் மிர்புரில் இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. இதனை அடுத்து மைதானம் பாய்களால் மூடப்பட்டது. மழை நின்றதும் மைதானத்தில் இருந்து தண்ணீர் அகற்றப்பட்ட பின்னர் போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பந்து வீச முடிவு செய்தார். கடந்த போட்டியில் விளையாடிய பவன் நெகி, ஹர்பஜன் சிங் மற்றும் புவனேஷ் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு அஸ்வின், நெஹ்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர்.
வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் அதிரடியாக ரன் குவிக்க முயன்றனர். ஆனால் நெஹ்ராவும், பும்ராவும் கட்டுக்கோப்பாக பந்து வீசியதால் தமிம் இக்பால் 13 ரன்களிலும், சவுமிய சர்க்கார் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அல் ஹசன் அதிரடியாக ஆடி 21 ரன்கள் குவித்தார்.
கடைசி கட்ட ஓவர்களில் வங்காளதேச அணியின் மஹ்மதுல்லா நேர்த்தியான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அந்த அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதேசமயம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சும் துல்லியமாக இல்லை. பாண்டியா 3 ஓவர்கள் வீசி 35 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
பும்ரா 3 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதேபோல் அஸ்வினும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
வங்காளதேச அணியில் அதிகப்பட்சமாக மஹ்மதுல்லா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சபீர் ரகுமான் 32 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 120 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் அஸ்வின் நெஹ்ரா, பும்ரா மற்றும் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
இந்தியா 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ரோகித் சர்மா 1 ரன்னில் அல் அமின் பந்தில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு வீராட் கோலியும் தவானும் நிதானமாகவும், அதேசமயம் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் ஆடி ரன் சேர்த்தார்கள். ஆனால் ரன் ரேட் தொடர்ந்து 8-க்கு மேலாக இருந்ததால் ஆட்டத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவியது.
அதிரடியாக ஆடிய தவான் 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அற்புதமாக பேட்டிங் செய்த கோலி வங்காளதேச பவுளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். 60 ரன் எடுத்திருந்த போது தவான் அவுட் ஆனார்.
இதுவரை யுவராஜ், பண்டியா போன்றவர்களுக்கு தனக்கு முன்பாக களமிறாங்க வாய்ப்பளித்த தோனி, முக்கியமான இறுதி போட்டியில் தானே களமிறங்க முடிவு செய்தார். கடைசி 12 பந்துகளில் 19 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் 19-வது ஓவரை அல் அமின் வீசினார். முதல் பந்தை 104 மீட்டர் துரத்திற்கு அடித்து மிகப் பெரிய சிக்சராக மாற்றினார். மீண்டும் 4-வதுபந்தை பவுண்டரிக்கும், 5-வது பந்தை சிக்சருக்கும் விரட்டி தனக்கே உரிய முறையில் வெற்றிக்கான ரன்களை எடுத்தார் தோனி.
விராட் கோலி 28 பந்துகளில் 41 ரன்களும், தோனி 6 பந்துகளில் 20 ரன்களும் எடுத்தனர். ஆட்டநாயகனாக 60 ரன்கள் எடுத்த தவான் தேர்வு செய்யப்பட்டார்.
தோனி தலைமையில் இந்தியா இரண்டாவது முறையாக ஆசியக் கோப்பை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதுவரை மொத்தமாக 6 முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ளது இந்தியா.

No comments
Thank you for your comments