Breaking News

ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேசத்துரோக வழக்கு

டெல்லி, பிப்.29:
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 9 பேர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிய அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்,
நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், இந்திய எதிர்ப்பு கோஷங்களும் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் மற்றும் சில நிர்வாகிகள் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் ஜனார்த்தன் கவுட் என்பவர், ஐதராபாத் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் மீது டெல்லி போலிசார் தேசத்துரோக வழக்கு போட்டிருப்பது தெரிந்தும், ராகுல் காந்தி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, ஐக்கிய ஜனதாதள செய்தித்தொடர்பாளர் கே.சி.தியாகி, காங்கிரஸ் தலைவர்கள் ஆனந்த் சர்மா, அஜய் மக்கான் உள்ளிட்டோர் பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்றனர். மாணவர்களுக்கு ஆதரவும் தெரிவித்தனர். ஆகவே, இதுவும் தேசத் துரோகம்தான்.

ஆகவே அவர்கள் மீதும் தேசத்துரோக வழக்கு பதியப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்தி உள்பட 9 பேர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யுமாறு போலிசாருக்கு உத்தரவிட்டது. அடுத்தகட்ட விசாரணையை 4ம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

அதன்பேரில், ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, கே.சி.தியாகி, ஆனந்த் சர்மா, அஜய் மக்கான், கன்னையா குமார், உமர் காலித் ஆகிய 9 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் (இ.பி.கோ.) 124ஏ பிரிவின் கீழ்,தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments